இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையில் தவறு: சசி தரூர்
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையில் தவறு: சசி தரூர்
UPDATED : செப் 07, 2025 10:44 PM
ADDED : செப் 07, 2025 10:40 PM

திருவனந்தபுரம்: '' இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் குறிப்பிட்ட தவறு உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி செய்யவும் முடியாது,'' என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
வரி விதிப்பு காரணமாக இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி சீனா சென்று வந்த பிறகு அமெரிக்கர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் கூறும் போது, இந்தியா மன்னிப்பு கேட்டு, அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போடும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது: நாம் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றும் கிடையாது. இந்தியா முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறது . ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தகத்தை இந்தியா மேற்கொள்ள அமெரிக்க முன்னாள் நிர்வாகம் ஊக்குவித்ததை மறக்கக்கூடாது. சர்வதேச சந்தையில் விலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்படி அமெரிக்கா கூறியது.
அடுத்ததாக, ரஷ்யாவிடம் நாம் வாங்கும் கச்சா எண்ணெயைவிட சீனா அதிகம் வாங்குகிறது. துருக்கியும் நம்மை விட அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குகிறது. ஐரோப்பா கச்சா எண்ணெய் வாங்காவிட்டாலும், ரஷ்யாவிடம் இருந்து மற்ற பொருட்களை வாங்குகின்றனர். மற்ற நாடுகள் அதிகம் பணம் கொடுக்கும் போது, நாம் தான் ரஷ்யாவின் தாக்குதலை தூண்டிவிடுவதாக கூறுவது விசித்திரமானது.
எனவே இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் குறிப்பிட்ட தவறு உள்ளது என நினைக்கிறேன். இதனை நியாயப்படுத்தவும் முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. அமெரிக்காவை போல் இந்தியாவும் இறையாண்மை கொண்ட நாடு என்பதை ஹோவர்டு லுட்னிக் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.