அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது
அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது
ADDED : டிச 19, 2025 04:56 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மழையால் மாடு இறந்ததில் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கேணிக்கரை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் பிரகாஷ்.30. இவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் பெய்த மழையில் இறந்தது. இறந்த மாட்டிற்கு அரசு அளித்த நிவாரணத் தொகை ரூ. 30,000 பிரகாஷின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததற்கு, தனக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் சேர்த்து 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று மேமாத்தூர் கிராம நிர்வாக உதவியாளர் பாஸ்கரணி கேட்டுள்ளார்.
இது குறித்து பிரகாஷ் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் பிரகாஷ் விஏஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த விஏஓ ஜெயபிரகாஷிடம் பணத்தைப் கொடுத்துள்ளார்.
விஏஓ அதனை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துடன், ஜெயபிரகாஷை கைது செய்தனர். தலைமறைவான உதவியாளர் பாஸ்கரணியை தேடி வருகின்றனர்.

