ADDED : ஜூன் 15, 2026 03:17 PM

திருப்பூர்: திருப்பூரில், வாரிசு சான்றிதழ் வழங்க, ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொட்டிபாளையம் விஏஓ ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 34; ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 6 ம் தேதி வாரிசு சான்றிதழ் கோரி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். விண்ணப்பம் தொடர்பாக ஆவணங்களை சரி பார்க்க தொட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக உள்ள, அவிநாசி, ராயன்கோவிலை சேர்ந்த ஞானசேகரன், 37 தொடர்பு கொண்டு நேரில் வர அறிவுறுத்தினார்.
இதையடுத்து, ஆவணங்களை எடுத்து கொண்டு வி.ஏ.ஓ. வை நேரில் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தார். ஆவணங்கள் சரி பார்ப்பின் போது, தாயாரின் இறப்பு சான்றிதழ் எடுக்க, நான்கு ஆண்டுகளை கடந்து உள்ள காரணத்தால், அதற்கான சான்றிதழை உடனே வழங்க முடியாது. காலதாமதம் ஏற்படும் என்று கூறினார். தொடர்ந்து, சான்றிதழ் வழங்க, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு வற்புறுத்தினார். பின், 4 ஆயிரம் ரூபாய் கொடுக்க அறிவுறுத்தினார். பணத்தை கொடுக்க விருப்பமில்லாத கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இன்று போலீசார் அறிவுறுத்தலின் படி, 4 ஆயிரம் ரூபாய் உடன் வி.ஏ.ஓ. அலுவலகத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றார். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெறும் போது, மறைந்து இருந்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ. ஞானசேகரனை கைது செய்தனர்.
