பேப்பரில் எழுதியதை தப்பாக பேசும் விஜய்: தி.மு.க., ஐ.டி.,அணி கிண்டல்
பேப்பரில் எழுதியதை தப்பாக பேசும் விஜய்: தி.மு.க., ஐ.டி.,அணி கிண்டல்
ADDED : டிச 25, 2025 04:30 AM

மதுரை: த.வெ.க., தலைவர் விஜய் பேப்பரில் எழுதி இருப்பதை தப்பு தப்பாக மேடையில் பேசுகிறார். அரசியல் மேடையைவெறும் பன்ச் டயலாக் பேசியும், பாட்டு பாடியும் ஓட்டி விட முடியாது என தி.மு.க., ஐ.டி.,அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் கூறினார்.
அவர் கூறியதாவது: த.வெ.க., தொண்டர்களுக்கு தங்களின் கட்சிக் கொள்கை என்னவென்றே தெரியவில்லை. எத்தனை தொகுதி ஜெயித்தால் ஆட்சியமைக்க முடியும் என்ற அடிப்படை விஷயம் கூட இல்லாமல் உள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய் பேப்பரில் எழுதி இருப்பதை தப்பு தப்பாக மேடையில் பேசுகிறார். அவ்வப்போது மறந்தும் விடுகிறார். அரசியல் மேடையைவெறும் 'பன்ச் டயலாக்' பேசியும், பாட்டு பாடியும் ஓட்டிவிட முடியாது. நீங்கள் 'துாய சக்தி' என்பதை எப்படி நம்புவது; துாய சக்தி தங்களின் திட்டம் பற்றி இதுவரை வாய் திறந்திருக்கிறதா.
விஜய்க்கு தன் கட்சியின்பத்து தொண்டர்கள் பெயர்கள் கூட தெரியாது. கொள்கையே தெரியாத புரிதல் இல்லாத தொண்டர்களால், த.வெ.க., அரசியல் எதிர்காலமே இல்லாமல் தள்ளாடி வருகிறது. த.வெ.க., வில் இருப்பவர்கள் பிற கட்சி பெண்களை அநாகரிகமாக பேசுகிறார்கள்.
சோசியல் மீடியாவில், 'நாளைக்கு உன்னை சாகடித்து விடுவேன்; ஆசிட் ஊற்றி விடுவேன்' போன்ற தரம் தாழ்ந்த கமெண்டுகளில் த.வெ.க., வினர் திட்டுகிறார்கள். தங்கள் கட்சி தொண்டர்களையே கட்டுப்படுத்த தெரியாத தலைவனால் ஆட்சிக்கு வந்து சட்டம், ஒழுங்கை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்றார்.

