பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
UPDATED : நவ 11, 2025 08:04 AM
ADDED : நவ 11, 2025 08:03 AM

பாட்னா: பீஹாரில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று (நவ.,11) காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில், ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
முதற்கட்ட தேர்தல்
ஆளும் தே.ஜ., கூட்டணி யின் முதல்வர் வேட்பாள ராக நிதிஷ் குமார் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், 'மஹாகட் பந்தன்' கூட்டணி யில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பீஹாரின், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், கடந்த 6ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஓட்டுப்பதிவு
இந்நிலையில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்பாரண் மேற்கு, கிழக்கு, சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில், 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று (நவ., 11) நடைபெறுகிறது. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மாலை 6:00 மணி வரை நடக்கும். இதற்காக மொத்தம், 45,399 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 40,073 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்
மொத்தமுள்ள, 7.42 கோடி வாக்காளர்களில், 3.67 கோடி பேர் இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதில், 30 - 60 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 2.28 கோடி; 18 - 19 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 7.69 லட்சம்.
ஆளும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ் - சுபவுல் தொகுதியிலும்; பா.ஜ., அமைச்சர்களான பாபிரேம் குமார் - கயா டவுன்; ரேணு தேவி - பெட்டியா, நீரஜ் குமார் சிங் - சத்தாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நவ.,14ல் ரிசல்ட்
122 தொகுதிகளில், 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நவாடா மாவட்டத்தின் ஹிசுவா தொகுதியில் அதிகபட்சமாக, 3.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். லாரியா, சன்பதியா, ரக்சால், திரிவேணிகஞ்ச், சுகவுலி, பன்மகி ஆகிய தொகுதிகளில், தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று ஓட்டுப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், வரும் 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

