பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம்; இனப்படுகொலை வழக்கில் மியான்மர் வாதம்
பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம்; இனப்படுகொலை வழக்கில் மியான்மர் வாதம்
UPDATED : ஜன 19, 2026 04:43 AM
ADDED : ஜன 19, 2026 04:28 AM

தி ஹேக்: ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது எந்த இனப்படுகொலையும் நடத்தப்படவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுத்தோம் என, சர்வதேச நீதிமன்றத்தில், மியான்மர் தரப்பில் வாதிடப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், பல ஆண்டு காலமாக ராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது. இங்கு, புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இங்குள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டு அரசு உள்ளூர் இனக்குழுவாக கருதவில்லை.
அவர்களை, வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என முத்திரை குத்தியது. அவர்களுக்கு குடியுரிமையும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017, ஆகஸ்ட்டில், அரகன் ரோஹிங்யா மீட்பு படை என்ற பயங்கரவாத குழு, 30க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஒரு ராணுவ முகாமைத் தாக்கியது. இதில், 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் எடுத்த, 'கிளியரன்ஸ் ஆப்பரேஷன்' நடவடிக்கையில், 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஐ.நா., விசாரணைக் குழு, இதை இனப்படுகொலை என்று கூறியது. மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியா, மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில், 2019ல் வழக்கு தொடுத்தது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில், மியான்மர் அரசு தரப்பில் ஆஜரான கோ கோ ஹிலைங் கூறுகையில், “அரகன் படை என்ற பயங்கரவாத அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது.
“ ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக எந்த ஒரு இனப்படுகொலையும் நடத்தவில்லை. இதில் சில பொதுமக்கள் இறந்தது வருந்தத்தக்கது,” என தெரிவித்தார்.

