ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்
ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்
UPDATED : நவ 25, 2025 08:14 PM
ADDED : நவ 25, 2025 08:12 PM

புதுடில்லி: '' ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாட்டினரை சார்ந்திருக்கும் நிலையை, இந்தியா தவிர்க்க வேண்டும், '' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
டில்லியில் கடற்படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடலோர பாதுகாப்பில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. அதில் கடற்படையுடன் புதுமையான கண்டுபிடிப்புகளும் ஒரு அங்கமாக உள்ளது. இன்றைய உலகம் பல முனைகளில் பயன்படும் தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறது. அந்தத் திசையில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்திய பொருளாதார வலிமை, சிந்தனை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது சாத்தியமாகி வருகிறது.
ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாட்டினரை சார்ந்திருக்கும் நிலையை, இந்தியா தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதால், சாதனங்களை வாங்குவதற்கு மட்டும் செலவு செய்யப்படவில்லை. அத்துடன், பராமரிப்பு, பழுது நீக்குதல், உதிரி பாங்களுக்காக தொடர்ச்சியாக செலவு ஆகிறது. இதனால் தான் நமது விநியோக சங்கிலியை முழுமையாகவும் வலுவாகவும் தன்னிறைவுடனும் மாற்ற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

