அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்போம்; டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு
அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்போம்; டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு
UPDATED : அக் 01, 2025 07:52 PM
ADDED : அக் 01, 2025 07:45 PM

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா போர் அமைதி திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் டிரம்ப் கெடு விதித்துள்ளார்
அதிபர் டிரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா போர் அமைதி திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: காசாவில் போர்நிறுத்தம் மற்றும் நிலையான அமைதியை அடைய இது நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் பங்கு முக்கியமானது. இப்போது அனைத்து தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்திற்கும், அதை செயல்படுத்துவதற்கும் உறுதியளிப்பது மிகவும் முக்கியமானது.
இந்த மோதலால் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம், காசா முழுவதும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் மற்றும் அனைத்து பிணை கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் முழுவதும் உள்ள மக்களுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்ல எதிர்காலத்தை ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது. இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.