ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு காரணம் என்ன? விவரித்த மலேசியா பிரதமர்!
ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு காரணம் என்ன? விவரித்த மலேசியா பிரதமர்!
ADDED : அக் 23, 2025 03:40 PM

புதுடில்லி: தீபாவளி கொண்டாட்டங்கள் காரணமாக, பிரதமர் மோடி 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சியில் கலந்து கொள்வார் என்பதை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. ஆசியான் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது:
கோலாலம்பூரில் 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் ஏற்பாடு குறித்து பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால், காணொலி வாயிலாக கலந்து கொள்வதாக அவர் எனக்குத் தெரிவித்தார்.
அவரது முடிவை நான் மதிக்கிறேன், அவருக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியா-இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தோம். தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்தியா மலேசியாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

