PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM

- டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ் 98843 53288
'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் இந்நாள் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவருமான நாகேந்திரனை தலை வராக ஆக்கினால், 'கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறிய, ஊழல் குற்றம் புரிந்த முன்னாள் அமைச்சர்களை கொண்ட அ.தி.மு.க., ஏன் இன்றுவரை, எந்த உதிரி ஜாதி கட்சிகளையும் கூட்டணிக்கு இழுத்து வரவில்லை? பா.ஜ., கூட்டணியில் உள்ளவர்கள் கூட வர மறுக்கின்றனரே... ஏன்?
தி.மு.க., ஆட்சி மீது, மக்கள் கடும் கோபம் கொண்டிருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அந்த கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்ட எம்.ஜி.ஆர்., முகத்தையும், ஜெயலலிதா என்ற சிங்க முகத்தையும் இன்று காணோம்!
அளவற்ற பணம்
தா லிக்கு தங்கம், லேப்டாப், சைக்கிள் முதலிய நலத்திட்டங்களால், 90 சதவீத பெண்களைக் கவர்ந்து, பலம் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அவருடைய வெற்றிடத்தை இனி, அ.தி.மு.க.,வில் யா ராலும் நிரப்ப முடியாது.
அ.தி.மு.க.,வில் தர்மயுத்தம் செய்தவரிடம், மொத்த உதிரி ஜாதி கட்சிகளையும் அதிக விலைக்கு வாங்கும் அளவற்ற பணம் இருக்கிறது. ஆனால், மக்கள் ஏன் இவர்களை நம்ப மறுக்கின்றனர், கூவத்துார் நாடகமா?
கடந்த லோக்சபா தேர்தலில், 18 சதவீத ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி பெற்றது. அதில், பா.ஜ.,வுக்கு மட்டும், 12 சதவீதம் கிடைத்தது. கடந்த வாரம் வரை, அந்த கூட்டணி நின்றது.
இந்த கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில், தி.மு.க., குறைந்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க., போட்டியிட்டு தி.மு.க., வென்ற இடங்களில், ஓட்டு வித்தியாசம் அதிகம். எட்டு சதவீத ஓட்டு வாங்கிய பேச்சுத்திறமை மிக்க சீமானை, இவர்களால் இழுக்க முடியவில்லை.
அண்ணாமலை, பா.ஜ., தலைவராக இருந்தவரையில், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற தலைப்பில் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மக்கள் அவரை உற்று நோக்கினர்; தி.மு.க.,வினர் பயந்தனர்.
டில்லி யில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, டி.ஆர்.எஸ்., கவிதா போன்று, இங்கும் பலர் கைதாவர் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டில்லிக்குச் சென்ற தி.மு.க.,வினர், அங்கு ஆட்சியாளர்களைப் பார்த்து வந்தவுடன், சோதனைகள், வழக்குகள் அனைத்தும் நின்றுவிட்டன.
'வீராவேசமாக, ஒன்றிய அரசு எனச் சொல்லி இங்கு விமர்சனம் செய்வது; அசிங்கப்படுத்துவது, ஆனால், டில்லி சென்று நட்பு கொண்டாடுவது... இது தான் திராவிட கலாசாரம்' என, பொதுமக்கள் கிண்டலடிக்கின்றனர்.
அ.தி.மு.க.,வை வெற்றிகரமாக நடத்திய ஜெயலலிதா, சற்று வித்தியாசமானவர். எதிர்த்தால், து வம்சம் செய்து விடுவார் ; உதாரணம், வாஜ்பாய் அரசை கவிழ்த்தது!
தமிழகத்தில், 58 ஆண்டுகளில், தி.மு.க., மட்டும் தான் ஊழல் செய்ததா... அ.தி.மு.க., செய்யவில்லையா? தலைவியும், தோழியும் சிறைக்குச் சென்றனரே...?
மக்கள் கேட்கும் கேள்வி என்ன... ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணையா? அமைதியாக, வாய் பேசாமல் இருக்கும் முன்னாள் என்.ஐ.ஏ., அதிகாரியும், தற்போதைய தமிழக கவர்னருமான ரவியை, அவருடைய மதிப்பைத் தரம் தாழ்த்துவது போல், தி.மு.க.,வினர் பேசும் பேச்சுகள், அன்று, தி.மு.க.,வின் முன்னாள் தலைவர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் காமராஜரை, 'எருமை தோலுடைய கருப்பன்' என்று பேசியதற்கு ஒப்பாக விளங்குகின்றன.
ஊழல் புகார்
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது, அண்ணாமலை கொடுத்த பல ஊழல் புகார் ஆகியவற்றின் மீது, இதுவரை எந்த விசாரணையும் இல்லை.
இதற்கெல்லாம் மேலாக, '2ஜி' புகழ் கனிமொழியை, 'ஆப்பரேஷன் சிந்துார்' குழுவில் சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பி அழகு பார்த்தது பா.ஜ.,வின் மத்திய அரசு.
இப்படி அனைத்து கவுரவங்களையும் அனுபவித்து விட்டு, 'மாநில அரசுக்கு மத்திய அரசு உதவுவதே இல்லை' என்று, தி.மு.க., கூறுகிறது. ஐக்கிய முன்னணியின் மன்மோகன் சிங் ஆட்சியில், 2ஜி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்ட கனிமொழியும், ராஜாவும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை ஆனது, நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், தவறுகள் மீது பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை, தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர்.
அதே போல், அ.தி.மு.க.,வின் ஊழல் முகங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி, பா.ஜ.,வை தமிழக மக்களுக்கு மிக நன்றாக அடையாளம் காட்டிய அண்ணாமலையை ஓரந்தள்ளி, அவர் வாயாலேயே, 'அ.தி.மு.க.,வின் பழனிசாமி தான் முதல்வர்' எனச் சொல்ல வைத்த பா.ஜ.,வையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வின் பழைய பெருச்சாளிகளும், தமிழகத்தில் ஊழலற்ற, அறிவுமிக்க தலைவரான அண்ணாமலையை, முன்னாள் முதல்வர் காமராஜர் போல உருவாகாமல் தடுத்து விட்டனர் என்பதே தற்போதைய பேசுபொருளாகி விட்டது.
'இது என்ன... திராவிட பா.ஜ.,வா?' என கேட்கும் மக்களுக்கு, யார் பதில் தரப் போகின்றனர்?
இது என்ன... திராவிட பா.ஜ.,வா?