/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தலாய் லாமா மதகுருவா, அரசியல் தலைவரா?
/
தலாய் லாமா மதகுருவா, அரசியல் தலைவரா?
PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

சீனா உடனான நம் நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதம் எழும் போதெல்லாம், பாகிஸ்தானை போலவே, தலாய் லாமா-வின் பெயரும் சேர்ந்து அடிபடும். ஆனால், பாக்., போல இல்லாமல், அவரின் பெயர் சிறிது காலத்திற்கு பின் காணாமல் போய், பின்னர் உயிர்த்தெழும். அப்போதெல்லாம், அமெரிக்கா போன்ற வெளிநாட்டிற்கு தலாய் லாமா பயணம் சென்றிருப்பார்; அங்கு பேசி இருப்பார் அல்லது நம் நாட்டின் உள்ளேயே தன் வாரிசு குறித்து கருத்து தெரிவித்திருப்பார்.
தலாய் லாமா என்பது ஒரு தனி மனிதரின் பெயரல்ல. மாறாக, உலகெங்கும் வாழும் திபெத்திய பவுத்தர்களின் மதம் மற்றும் அரசியல் தலைவரின் பதவியை குறிக்கும் பெயர்.
தற்போதைய தலாய் லாமாவின் இயற்பெயர் டென்சின் கியாட்ஸோ. திபெத்திய மக்களின் மத நம்பிக்கைப்படி, 600 ஆண்டுகளில் மறுபிறவி எடுத்த, 14வது தலாய் லாமா.
எப்போதோ தோன்ற இருக்கும் தன் வாரிசை, தானே அடையாளம் காண்பிக்க உள்ளதாக, சில சமயங்களில் அவர் கூறி வந்துள்ளார். இல்லை, தனக்கு பின், தன் வாரிசு தானாகவே சரியான காலத்தில் முன் வருவார் என, சில நேரங்களில் கூறியுள்ளார்.
தற்போதைய பிரச்னையே, இன்று தன், 90-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள சமயத்தில், தன்னால் உருவாக்கப்பட்ட, 'கேடன் போட்ராங் டிரஸ்ட்' அமைப்பே, தன் மறுபிறவி மற்றும் வாரிசு குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என, தலாய் லாமா அறிவித்தது தான். இதுவும் புதிய அறிவிப்பு அல்ல.
அவரின் இந்த அறிவிப்புக்கும், சீன அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
தற்போதைய தலாய் லாமாவோ, அவரால் நியமிக்கப்பட்ட குழுவோ, அவரது வாரிசை முடிவு செய்ய முடியாது. மாறாக, 600 ஆண்டுகளுக்கும் முந்தைய, 'குடவோலை' முறைப்படியே அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவும், சீன அரசால் ஏற்றுக்கொள்ளபட்டவரே தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், பீஜிங் கூறி வருகிறது.
அதாவது, புதிய தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்களை, முதலில் சீன அரசு 'ஓகே' செய்த பின்னரே, அந்த வாரிசு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதன் பின்னணியில், தலாய் லாமாவால், 1995ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பஞ்சன் லாமா என்ற 6 வயது குழந்தையையும், அவரின் பெற்றோரையும், திபெத்தின் சீன அரசு கடத்தி, காணாமல் ஆக்கியதை நினைவில் கொள்ள வேண்டும்.
சீனாவுக்கு என்ன வேலை?
நம் நாடு சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே, சீனாவில் விவசாயிகள் புரட்சி மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்த சர்வாதிகாரியான மாவோ சேதுங், அண்டை நாடுகள் உடனான எல்லை பிரச்னைகளை கையில் எடுத்தார். அதில் ஒரு பகுதி, நம் நாட்டுடனான, 1962 போர்;
தலாய் லாமா ஆட்சி செய்த திபெத் மீதான ஆக்கிரமிப்பு மற்றொன்று.
சீன ஆக்கிரமிப்பை தொடர்ந்து, அப்போது இளைஞராக இருந்த தலாய் லாமாவின் உயிருக்கு ஆபத்து வரும் நிலைமை தோன்றிய போது, அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், நம் நாடு புகலிடம் கொடுத்தது.
திபெத்திய தட்பவெட்ப நிலையை போன்று உள்ள, ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா என்ற இடத்தில், அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது.
திபெத்திய பவுத்த மதத்தின் தலைமை பீடமும், எல்லை தாண்டிய அரசின் தலைமையகமும், அங்கு தான் இன்றும் செயல்பட்டு வருகிறது.
நம் நாட்டின் எல்லை பிரச்னைக்கும், திபெத்திய பிரச்னைக்கும் நேரடி தொடர்பு இல்லாத காரணத்தாலும், சரித்திர சான்றுகளின் அடிப்படையிலும், அப்போதைய ஜவஹர்லால் நேரு அரசு, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகவே அங்கீகரித்தது.
நம் நாட்டில் புகலிடம் அளிக்கப்பட்ட தலாய் லாமா குழுவினர், உள்நாட்டில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறித்தியது.
ஆனால், 1962 சீனா யுத்தத்தை தொடர்ந்து, தலாய் லாமாவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து நம் அரசுகள், சிறிது தாராளவாதத்தை செயல்படுத்தி வந்துள்ளன.
எனினும், அன்று துவங்கி இன்று வரை, புதுடில்லியில் ஆளும் எந்த ஒரு அரசும் திபெத், சீனாவின் ஓர் அங்கமல்ல என்ற அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் நிலைப்பாட்டை ஆதரித்தது இல்லை.
மேலும், இரு நாட்டு உறவுகளின் ஏற்ற- இறக்கங்களுக்கு ஏற்ப, நம் நாடும் அவ்வப்போது, சீனாவிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வந்துள்ளது.
குறிப்பாக, நம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் தனக்கே சொந்தம் என்ற வாதம் மற்றும் நமக்கு எதிரான பாகிஸ்தானின் நகர்வுகளுக்கு ஆதரவு என்று எப்பொதெல்லாம் நடந்து கொள்கிறதோ, அப்போதெல்லாம், நாமும், திபெத் விஷயத்தில் ஏதாவது ஒரு காயை நகர்த்தி வந்திருக்கிறோம்.
பழைய மொந்தையில்
தற்போது, பிரச்னை மீண்டும் தலைதுாக்க காரணம், தலாய் லாமாவின் சமீப கால பேச்சு தான்.
நம்நாட்டை, அதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பேச்சு மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தது. எதிர்பார்த்தபடி, சீனாவும் ரிஜிஜுவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
அமைச்சரை குறிவைத்து தானோ என்னவோ, நம் வெளியுறவு துறை பேச்சாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், திபெத் விஷயத்தில் நாம் உணர்ச்சிபூர்வமான எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து, அமைச்சர் ரிஜிஜுவும் தான் தலாய் லாமாவை பின்பற்றும், ஒரு பவுத்தர் என்ற காரணத்தில் மட்டுமே பேசியதாக தெளிவுபடுத்தி உள்ளார்.
தலாய் லாமாவின் அறிவித்தல், அதைத் தொடர்ந்த சர்ச்சைகள் எல்லாவற்றையும் தாண்டி, நம் அரசு சீனாவுடனான பிற பேச்சுகளை முன்னெடுக்க தயாராகி வருகிறது.
இந்த பின்னணியில், சீனாவிற்கு எதிராக, திபெத்திய பிரச்னையில் நம் அரசிற்கு கொம்பு சீவி விடும் பணியில், உள்நாட்டு, வெளிநாட்டு அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் களம் இறங்கி உள்ளனர்.
திபெத் பிரச்னையை சீனாவுடனான புவிசார்ந்த அரசியலாக கருதி, இந்தியா தன் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது அவர்களின் வாதம்.
அதேசமயம், சில ஆண்டுகளுக்கு முன், தலாய் லாமா, தனக்கு பின் பதவியேற்கும் தன் வாரிசுகள் யாருமே, மத தலைமையை தாண்டி, அரசியல் தலைமை ஏற்கக்கூடாது என்று அறிவித்தார்.
அத்துடன் தன் அரசியல் பொறுப்புகளையும் தான் நியமித்த ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, தற்போது, திபெத்திய மதகுருவாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நினைத்தாலும், எதிர்காலத்தில் தலாய் லாமா பதவியை சர்வதேச அரசியலில் பகடைக் காயாக மாற்றிவிட முடியாது என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஆனால், அரசியல் சாரா மதகுரு பதவியை, சீன அரசு நீர்த்து போகச்செய்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளார்.
இந்த இரு வேறு நிலைப்பாடுகளை ஒட்டியே நம் நாட்டின் திபெத்திய கொள்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும்.