sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழா: நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே!

/

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழா: நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே!

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழா: நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே!

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழா: நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே!


PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தத்தாத்ரேயா ஹொசபலே

ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர்

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், தனது சேவையை ஆரம்பித்து, இன்றுடன் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இந்த, 100 ஆண்டு பயணத்தில், சங்கத்துடன் பலர் செயல் வீரர்களாகவும், செயல் ஊக்கிகளாகவும், நண்பர்களாகவும் பயணித்துள்ளனர்.

இந்த நீண்ட நெடிய பயணத்தில், பல சவால்களையும், கஷ்டங்களையும் நாம் சந்தித்த போதும், சாமானிய மக்களின் அன்பும், நன்மதிப்பும், நமக்கு சிறந்த உந்துசக்தியாக இருந்தன; பயணத்தையும் இனிமையாக்கின.

நாம் கடந்து வந்த இந்த நுாற்றாண்டு பாதையை திரும்பிப் பார்க்கும் போது, பல சுவாரசியமான நிகழ்வுகளும், தங்களின் நிகழ்காலத்தை சங்கத்தின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்த பல மனிதர்களை பற்றிய நினைவலைகளும், நம்மைப் பற்றிக்கொள்கின்றன.

அற்ப்பணிப்பு

சங்கத்தை ஆரம்பித்த காலத்தில், 'தேசபக்தி' என்ற ஒற்றை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள், போர் வீரர்கள் போல அர்ப்பணிப்புடன் நம் நாடு முழுதும் பயணத்து சேவை செய்தனர்.

டாக்டர் ஹெட்கேவாரின் ஆளுமையால் ஆட்கொள்ளப்பட்டு, சங்கத்தின் பணியே தங்கள் வாழ்வின் லட்சியம், அதுவே தேச சேவைக்கான சிறந்த வடிகால் என்று, தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களில் அப்பாஜி ஜோஷி போன்ற குடும்பஸ்தர்கள்.

தாதாராவ் பரமார்த், பாலாசாஹேப் மற்றும் பாபுராவ் தேவ்ரஸ் சகோதரர்கள், யாதவராவ் ஜோஷி, ஏக்நாத் ரானடே போன்ற, சங்கமே என் குடும்பம் என்று தங்களை முழுமையாக அர்ப்பணித்த பிரசாரகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அடக்கம்.

சமுதாயத்தின் துணையுடன் சங்கம் பீடுநடை போட்டு முன்னேறியது. சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு ஏற்புடையதாக இருந்ததால், சங்க வேலைக்கு பொதுமக்கள் ஆதரவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரித்தது.

ஒருமுறை, மேலைநாட்டு பயணத்தில் இருந்த சுவாமி விவேகானந்தரிடம், 'உங்கள் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவு கிடையாது. ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அப்படி இருக்கையில், அவர்களுக்கு நீங்கள் கூறும் உயரிய தத்துவார்த்த விஷயங்கள் எப்படி புரியும்?' என, கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், 'எறும்புகளுக்கு சர்க்கரையை கண்டுபிடிக்க ஆங்கிலம் எப்படி தேவையில்லையோ, அதுபோல எங்கள் தத்துவ தரிசனங்களை அறிந்து கொள்வதற்கு, எந்த அந்நிய மொழியும் தேவையில்லை. அவர்களின் உள்ளுணர்வு அவர்களை வழிநடத்தும்' என்று பதில் அளித்தாராம்.

விவேகானந்தரின் இந்த வாக்கை போல, சங்கத்தை பற்றிய புரிதல், சிறிது தாமதமானாலும் சாமானியர்களை சிறப்பாக சென்றடைந்து உள்ளது. சங்கம் இன்று எல்லாரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

சங்கத்தை ஆரம்பித்த காலத்தில் தேசபக்தி என்ற ஒற்றை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள், போர் வீரர்கள் போல அர்ப்பணிப்புடன் நம் நாடு முழுவதும் பயணித்து சேவை செய்தனர்


ஆரம்ப காலத்திலிருந்து, சங்க காரியகர்த்தர்களுக்கு பல சாமானிய குடும்பங்களின் ஆசியும், ஊக்கமும் கிடைத்தது. ஸ்வயம் சேவகர்களின் குடும்பங்களே சங்க காரியத்தின் மையப்புள்ளி என்று கூறலாம். பல சங்க காரியங்கள், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரியரின் ஒத்துழைப்பாலேயே முழுமை பெற்றன என்று கூறினால் மிகையாகாது.

தத்தோபந்த் தெங்கடி, யஷ்வந்த்ராவ் கேல்கர், பாலாசாஹப் தேஷ்பாண்டே, ஏக்நாத் ரானடே, தீனதயாள் உபாத்யாயா, தாதாசாஹப் ஆப்தே போன்றவர்கள், சங்கத்தின் சக்தியை பயன்படுத்தி சமுதாயத்தின் பல்வேறு கூறுகளில், பலதரப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

இன்று இந்த அமைப்புகள் தங்கள் பணிகளை விரிவாக்கம் செய்து, சமுதாய மாற்றத்தின் காரணிகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

முக்கியமாக, தாய்மார்களுக்கு மத்தியில் சேவாகாரியங்கள் செய்யும், ராஷ்ட்ர சேவிகா சமிதி, ஆரம்ப காலத்தில் மோசிஜி கேல்கரின் வழிகாட்டுதலில் துவங்கி, பிரமிளாபாய் மேதே போன்ற பல தாயுள்ளம் கொண்டவர்களின் வழிகாட்டுதலில் செய்து வரும் சேவைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

சங்கம் பல நேரங்களில் தேச நலனுக்காக, மிக முக்கியமான விஷயங்களை கையில் எடுத்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த விஷயங்களில், சங்கத்திற்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதுமட்டுமின்றி, சில நேரங்களில், சங்கத்தை எதிர்ப்பவர்கள் ஆதரவு கிடைத்த வரலாறும் உண்டு.

ஒருமைப்பாடு

நம் ஹிந்து சமுதாயம் குறித்த விஷயங்களில், நம் நாட்டின் அனைத்து தரப்பினரும் கூடி ஒருசேர முடிவெடுக்க வேண்டும் என்றே சங்கம் எண்ணுகிறது. தேசத்தின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், குடியாட்சி, நம் கலாசாரத்தை போற்றி பாதுகாத்தல் போன்றவற்றிற்கு, நம் காரியகர்த்தர்கள் செய்த தியாகங்கள் கணக்கில் அடங்காது.

இதற்காக பல ஸ்வயம் சேவகர்கள் உயிர் தியாகமும் செய்துள்ளனர். இவற்றை, சமுதாயத்தின் உதவியில்லாமல் சங்கத்தால் செய்திருக்க முடியாது. கடந்த, 1981ல், தமிழகத்தில் அன்றைய நெல்லை மாவட்டம், தற்போதை தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில், பல ஹிந்துக்கள் தவறான வழிநடத்தல் காரணமாக மதமாற்றம் செய்யப்பட்ட போது, சங்கத்தின் முயற்சியால், காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் கரண்சிங் தலைமையில், ஐந்து லட்சம் பொதுமக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று நடந்தது.

1964ல் விஸ்வ ஹிந்து பரிஷத் துவங்கப்பட்டதில், - ஹிந்து சந்நியாசி, சுவாமி சின்மயானந்த சரஸ்வதி, மாஸ்டர் தாரா சிங், ஜெயின் முனி சுஷில் குமார்ஜி, பவுத்த பிக்கு கவுஷல் பாக்குலா, நமதாரி சீக்கியர்களின் சத்குரு ஜெகஜீத் சிங் ஆகியோரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சங்கமும், ஸ்வயம் சேவகர்களும் இன்னல்களை சந்தித்த போது நம் தாய்மார்களும், சகோதரியரும், நடக்க வேண்டிய விஷயங்களை தடையில்லாமல் செய்து முடித்தனர். இவை அனைத்தும் நாம் இன்றும் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன.


கர்நாடகா மாநிலம் உடுப்பியில், குருஜி கோல்வால்கர் வழிகாட்டுதலில் நடந்த விஸ்வ ஹிந்து சம்மேளனத்தில், ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்ற தீர்மானத்தை இயற்றி ஆசி புரிந்தனர், ஹிந்து மதத்தின் பல சாதுக்கள், சந்நியாசிகள்.

அதற்கு முன், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கூட்டத்தில், 'ந ஹிந்து பதிதோ பவேத்' அதாவது, 'ஹிந்துக்களில் தாழ்ந்தவர் என்பவர் இல்லை' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல, உடுப்பியில், 'ஹிந்தவ: சோதரா சர்வே' அதாவது, 'ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள், அவர்கள் அனைவரும் பாரத தாயின் புதல்வர்கள்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசுவதைக்கு எதிரான இயக்கமாகட்டும் அல்லது ராமஜென்ம பூமி இயக்கமாகட்டும், சாதுக்கள், சந்நியாசிகளின் பரிபூரண ஆசி என்றும், ஸ்வயம் சேவகர்களுக்கு கிடைத்து வந்துள்ளது.

பாரதம் விடுதலை அடைந்தபின், சில அரசியல் காரணங்களுக்காக சங்கம் தடை செய்யப்பட்ட போது, முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது, சாமானியர்களும், அத்தடையை எதிர்த்து வெகுண்டு எழுந்தனர்.

வெற்றி பெறும்

அந்தத் தடை தவறானது என்று கூறி, பலரும் பயமின்றி அரசை எதிர்த்தனர். இதுபோன்ற நிலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போதும் தோன்றியது.

இப்படி பல தடைகளையும் கடந்து, சங்கத்தின் சேவா காரியங்கள் வளர்ந்து பெருகிய வண்ணமே உள்ளன. சங்கமும், ஸ்வயம் சேவகர்களும் இன்னல்களை சந்தித்த போது, நம் தாய்மார்களும், சகோதரியரும், நடக்க வேண்டிய விஷயங்களை தடையில்லாமல் செய்து முடித்தனர். இவை அனைத்தும் நாம் இன்றும் பின்பற்ற வேண்டிய மிகச்சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன.

வரும் காலங்களில், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் ராஷ்ட்ர சேவையில் ஈடுபடுத்தும் முயற்சியாக, சங்கத்தின் நுாற்றாண்டு ஆண்டான, 2025ல், நம் சங்க ஸ்வயம் சேவகர்கள் வீடு வீடாகச் சென்று, சங்க செய்தியை சொல்லும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சி, நம் நாட்டின் மிகப்பெரிய நகரங்கள் துவங்கி மிகச்சிறிய கிராமங்கள் வரை, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம் நடத்துவதே சங்கத்தின் அவா. நல்லோர் அனைவரையும் இணைத்து, நம் நாட்டை மேம்படுத்துவதற்கு நம் சங்கம் எடுக்கும் முயற்சி, மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.






      Dinamalar
      Follow us