'அரசு டாக்டர்களை நசுக்கி விட்டு இந்த அரசு என்ன சாதிக்க போகிறது?'
'அரசு டாக்டர்களை நசுக்கி விட்டு இந்த அரசு என்ன சாதிக்க போகிறது?'
ADDED : அக் 20, 2025 02:00 AM

சென்னை: 'நான்கரை ஆண்டுகள் கடந்தும், அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை, தி.மு.க., அரசு ஏற்கவில்லை' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:
அரசு டாக்டர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை, சட்டசபையில் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. இயற்கை பேரிடர் நேரங்களிலும், 19,000 அரசு டாக்டர்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊதிய உயர்வு அளிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆகியும், எங்களது கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.
மற்ற மாநிலங்களில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் எப்படி இருந்தாலும், அங்கு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. இங்கு துறை செயல்பாடுகளில் முதல் இடத்தில் இருந்தாலும், அரசு டாக்டர்களின் ஊதியத்தில் கடைசி இடமாக உள்ளது. சுகாதார துறையின் இதயமாக உள்ள அரசு டாக்டர்களை நசுக்கி விட்டு, இந்த அரசு என்ன சாதிக்க போகிறது?
தீபாவளி பரிசாக அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன், டாக்டர்கள், நர்ஸ்கள் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.