sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உறவுகளிடையே சிக்கலை ஏற்படுத்தும் தங்கம் விலை; சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறல்

/

உறவுகளிடையே சிக்கலை ஏற்படுத்தும் தங்கம் விலை; சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறல்

உறவுகளிடையே சிக்கலை ஏற்படுத்தும் தங்கம் விலை; சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறல்

உறவுகளிடையே சிக்கலை ஏற்படுத்தும் தங்கம் விலை; சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறல்


ADDED : அக் 20, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 20, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்துடன், யாரும் கணிக்க முடியாத அளவிற்கு, தினமும் உயர்ந்தும் வருகிறது. இது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, குடும்ப உறவுகளிடம் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், சாமானிய மக்கள் திணறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தங்கம் என்பது, நம் மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்துள்ளது. தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. இதனால், தங்கத்தின் பயன்பாடு மற்றும் விற்பனையில், மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னணியில் உள்ளது.

கல்வி, மருத்துவம் போன்ற அவசிய செலவுகளுக்கு கையில் பணம் இல்லாத போது, தங்கத்தை அடகு வைத்தால், உடனே பணம் கிடைக்கும். எனவே, அவசரத்துக்கு உதவும் எனக்கருதி, பலரும்தங்கம் வாங்குகின்றனர். தங்கம் விலை ஆண்டுக்கு சராசரியாக, 30 சதவீதம் உயரும். தேவை அதிகம் என்பதால், அதன் விலை உயர்ந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் உணவு, உடை போன்றவற்றில், கலாசாரம், பண்பாடு ரீதியாக, பல மாற்றங்கள் வந்தாலும், குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிணைப்பு, இன்னமும் பழமை மாறாமல் தொடர்கிறது. மகன், மகள் திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தைக்கு பெயர் சூட்டல், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்றவை, கிராமம் முதல் மாநகரம் வரை இன்றும் தொடர்கிறது.

இந்த நிகழ்வுகளின் போது ரத்த உறவுகள், பங்காளி உறவுகள், நெருக்கமான நண்பர்கள், தங்களின் வசதிக்கு ஏற்ப, நிகழ்ச்சி நடத்துவோருக்கு, கால் சவரன், அரை சவரன், ஒரு சவரன் என, தங்க நகைகளை வழங்குவர். குறிப்பாக தாய்மாமன்களாக இருப்போர், தங்களது சகோதரியின் குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தங்க நகையை மொய்யாக அளிக்க வேண்டும்.

பெயர் சூட்டு விழாவுக்கு செயின், காதணி விழாவுக்கு தோடு, செயின், திருமணத்திற்கு மோதிரம், செயின், பிரேஸ்லெட் போன்றவற்றை கண்டிப்பாக வழங்க வேண்டும். அதேபோல, சுப நிகழ்ச்சிகளில், ஒருவர் நகையாக மொய் செய்திருந்தால், அவர் வீட்டு நிகழ்வுகளில், அதே அளவு அல்லது அதை விட சற்று கூடுதல் கிராம்களில் தங்க நகைகளை திரும்ப வழங்க வேண்டும். எனவே சிலர், தங்களுக்காக நகை வாங்குகின்றனரோ இல்லையோ, மொய் செய்வதற்காக, மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் மாதம், 500 ரூபாய், 1,000 ரூபாய் என சேமித்து, நகை வாங்குகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த, 2024 அக்., 10ல், 7,100 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் விலை, தற்போது, 12,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன்படி, 56,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட சவரன், தற்போது, 97,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் கிராமுக்கு, 5,100 ரூபாய், சவரனுக்கு, 40,800 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால், 2024ல் முக்கால் சவரனுக்கு நகை வாங்க செலவிடப்பட்ட தொகை, கடந்த ஓராண்டில் சவரனுக்கு உயர்ந்துள்ள தொகையாக உள்ளது. தங்கம் விலை உயர்வு காரணமாக, தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில், மொய்யாக தங்க நகை அளித்தவர்களுக்கு, மீண்டும் தங்க நகை வழங்க முடியாமல், பலரும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் தங்க நகைக்கு பதிலாக, தங்களுக்கு மொய் செய்த அளவு நகைக்குரிய பணத்தை கொடுக்க முன் வந்தால், பலர் ஏற்க மறுத்து தங்களுக்கு நகையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது, உறவுகளுக்குள் கசப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நகை வாங்க பலர் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தவிர திருமணத்திற்கு வரதட்சணையாக, மணமகன் வீட்டார் அதிக நகைகளை கேட்கும் போது, நடுத்தர மக்கள் முன்பெல்லாம் கேட்ட நகைகளை கொடுக்க முடிந்தது.

தற்போது விலை உயர்வு காரணமாக, அந்த அளவு கொடுக்க முடியாததால், திருமணங்கள் தடைபடும் சூழலும் உருவாகி உள்ளது. தங்கம் விலை உயர்வு, பொருளாதாரத்தில் மட்டுமின்றி, சமூக சூழலிலும், உறவுகளிடையிலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us