பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்?: எழுதுங்கள் வாசகர்களே...!
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்?: எழுதுங்கள் வாசகர்களே...!
UPDATED : ஜூன் 14, 2026 04:15 PM
ADDED : ஜூன் 13, 2026 12:45 PM

- நமது நிருபர்-
ஒடிசாவில் பள்ளி முதல் கல்லுாரி வரை அரசு கல்வி நிலையங்களில் இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உ.பி., ம.பி., போன்ற மாநிலங்களில் ஆன்மிக பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் இருக்கிறது. நமது கலாசாரம், பண்பாட்டை பாதுகாப்பதாகவும், அவற்றை அடுத்து வரும் தலைமுறைக்கு கற்றுத்தரும் வகையிலும் இல்லை.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக பாடத்திட்டத்தில் ‛‛நீதி போதனை'' வகுப்புகள் நடத்தப்பட்டன. வாரம் 2 அல்லது 3 வகுப்புகள் அறநெறிகளை போதிப்பதற்காக நடத்தப்பட்டன. காலப்போக்கில் மற்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், இந்த நீதிபோதனைக்கு ‛‛குட்பை'' சொல்லிவிட்டனர்.
அதில் இருந்தே மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை மதிக்க வேண்டும், பெற்றோர்களை வணங்க வேண்டும் போன்ற அறநெறிகள் அற்றுப் போய்விட்டன. நமது பள்ளிகள் ‛‛மெக்கானிக்கலாகவும்'', பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் செயல்படத் துவங்கின.
இந்த சூழ்நிலையில் படிக்கும் மாணவர்களும், ‛‛பணம் பண்ணுவது தான் வாழ்க்கை'' என்று நினைக்க ஆரம்பித்தனர். இதனால் பொது இடங்களில் நாகரீகமாக நடக்க வேண்டும்; சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்; அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை துன்புறுத்தக் கூடாது; பெண்களை மதிக்க வேண்டும்; அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நீட்டக் கூடாது; தான தர்மங்கள் வழங்க வேண்டும்.
பெற்றோர், வயதில் மூத்தோர், ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்; உழைத்து வாழ வேண்டும்; அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது; லஞ்சம் தரக் கூடாது; ஊழல் செய்யக் கூடாது போன்ற விஷயங்கள் கற்றுதரப்படாமல் போய்விட்டன.
எனவே, புதிய அரசாவது பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகளை துவக்க வேண்டும். ஆன்மிக விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். அனைத்து மதங்களில் சொல்லப்பட்ட நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையால் நடத்தப்படும் ‛‛பாலவிகாஸ்'' பள்ளிகளில் இருப்பது போல் அறநெறியுடன் கூடிய பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் கவனம் சமூக விரோத நடவடிக்கைகளில் செல்வதைத் தவிர்க்க விளையாட்டுகளை கட்டாயமாக்க வேண்டும். மனதை கட்டுக்குள் வைக்க யோகா வகுப்புகளை நடத்த வேண்டும்.
கடந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் லைசென்சை புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சத்தை தனியார் பள்ளிகள் தர வேண்டி இருந்தது. அப்படி போட்ட பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி கூடங்கள், வியாபார மையங்களாக மாற வேண்டியதாயிற்று.
இதற்கு இப்போதைய தவெக அரசு முடிவு கட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிகள் மீண்டும் சேவை நிறுவனங்களாக மாறும். இது பற்றி வாசகர்களே இந்த செய்தியின் ‛‛கமென்ட்'' பகுதியில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
