பெரியார் நூலகத்தில் ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம்
பெரியார் நூலகத்தில் ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம்
ADDED : நவ 06, 2026 02:31 PM

சென்னை: கோவை பெ ரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: கோவை பெரியார் நூலகம் எப்படிப்பட்ட மோசடியை நிகழ்த்தியுள்ளது என்று பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை காட்டுகிறது. பல கோடி ரூபாய்க்கு நூல்களை வாங்கி அடுக்கியுள்ளனர். அத்தனையும் ஏ.ஐ வைத்து உருவாக்கப்பட்ட போலிநூல்கள். முழுக்கமுழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல. அத்தனைவரியும், அத்தனை செய்திகளும் பிழைகள். தமிழகத்தின் முதல்வராகக்கூட கற்பனைபெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஏ.ஐ செயலிகள் உருவாக்கியவை இவை. (இன்று ஏ.ஐ.செயலி இந்த அளவுக்கு பொய்ச்செய்திகளைச் சொல்வதில்லை) ஏ. ஐ 'ஹலூசினேட்' செய்த தகவல்கள். முற்றிலும் பிழையான மொழி. நூல்கள் பலமடங்கு விலைக்கு வாங்கி அடுக்கப்பட்டுள்ளன.
பொய்யான பெயர்கள்
அத்தனை நூல்களையும் உடனடியாக எரிக்கவேண்டும். அள்ளி வெளியே போடுவதே ஆபத்து. ஏனென்றால் இவை பழைய நூல்களாக உலவினால்கூட அறிவுலகுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும். இவற்றிலுள்ள அபத்தங்கள் வெவ்வேறு கட்டுரைகளாக, ஆய்வுகளாக திரும்ப நிகழும். ஏ.ஐ அவற்றை மீண்டும் எடுத்து கொடுக்கையில் அவை அதிகாரபூர்வச் செய்திகளாக ஆகிவிட்டிருக்கும். அந்த பிழைகள் பெருகிக்கொண்டே இருப்பவை. ஏ.ஐ அவற்றை பெருக்கும்போது மானுட அறிவு அதனுடன் போரிட முடியாது. பிழைகளை நீக்கவே முடியாது. அந்த நூல்களை வெளியிட்ட அகல் பதிப்பகம் என்பது பொய் விலாசம் கொண்ட பொய் நிறுவனம். அந்த பதிப்பகம் மட்டும் 1800 தலைப்புகளில் நூல்களை அச்சிட்டு அளித்துள்ளது. அவற்றை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் பொய்யான பெயர்கள்.
அயோக்கியன் எவன்?
இவை எல்லா நடைமுறைகளையும் பயன்படுத்தி, பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எவனெல்லாம் துணைநின்றனர்? இவர்களை கண்டுபிடித்து தண்டிப்பது நியாயமான கோரிக்கை. ஆனால் தமிழகத்தில் அதெல்லாம் நிகழவே வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இவற்றை நியாயப்படுத்தி கட்டுரைகளை எழுத ஆரம்பித்துவிடுவார்கள் கூலி அறிவுஜீவிகள். உண்மையில் இந்நூல்கள் இதேபோல அண்ணா நூலகம் போன்ற பிற நூலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் வாங்கி அடுக்கப்பட்டுள்ளனவா?
அவற்றை எல்லாம் நீக்க என்னவழி? எண்ணிப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.
பெரும் சூறையாடல்
சென்ற நூறாண்டுகளில் தமிழ் அறிவுலகம் மீது விடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல் இந்த ஊழல். அதிலும் ஒரு சில கோடிகளுக்காகச் செய்யப்பட்ட பெரும் சூறையாடல். இதைச் செய்தவன்களுக்கெல்லாம் படிக்கும் பிள்ளைகள் இருக்க மாட்டார்களா? தமிழர் பெருமை, தமிழ்ப்பெருமை என்றெல்லாம் நாளெல்லாம் எவரோ செவிமூட கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்ந்துள்ளது. எந்த விளைவு ஏற்படும்? எவருக்கும் எந்தக்கூச்சமும் இருக்காது. எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அப்படியே கடந்துசெல்வார்கள். ஏனென்றால் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய அழிவுச்செயல்பாட்டின் ஒரு முகம்தான் இது. இவ்வாறு ஜெயமோகன் கூறியுள்ளார்.
