கரூர் செல்ல விஜய் அனுமதி வாங்குவது எதற்கு: அண்ணாமலை கேள்வி
கரூர் செல்ல விஜய் அனுமதி வாங்குவது எதற்கு: அண்ணாமலை கேள்வி
ADDED : அக் 09, 2025 06:53 PM

கரூர்: '' தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? வேண்டுமானாலும் வரலாமே. தலைவர்கள் தினமும் வருகின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அரசியல் செய்யவில்லை
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் என்கின்றனர். தகவல் கொடுத்துவிட்டு தொண்டர்களிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம். டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தை விட்டுக்கொடுக்க முடியாது. நமது தாய்நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது. எங்கே வேண்டுமானாலும் எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் எந்த பகுதிக்கும் செல்லலாம்.
இந்த விஷயத்தை நான் அரசியல் செய்யவில்லை. தைரியத்தோடு போகலாம். அரசியல் தலைவர்கள் போவதற்கு என்ன? ஒரு நாளுக்கு முன்னர் தகவல் சொல்லிவிட்டு போகலாம். அவர்கள் பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். போலீசார் அவர்களையும் பாதுகாப்பார்கள்.
விஜய் கரூருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? வேண்டுமானாலும் வரலாமே. தலைவர்கள் தினமும் வருகிறார்கள். முதல்வர் முதல் கமல் வரை வந்துள்ளனர். தேஜ எம்பிக்கள் குழுவினர் வந்துள்ளனர். கரூருக்கு எல்லோரும் வரட்டும். தனிப்பட்ட முறையில், அஞ்சலி செலுத்த வேண்டுமானாலும் வரட்டும். இந்த நேரத்தில் கரூர் மக்களை விட்டுக்கொடுக்க முடியாது.
வேண்டுகோள்
விஜய் கரூர் பயணம் குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து கவனிக்கவில்லை. கரூர்காரனாக, நான் சொல்வது மண்ணின் மைந்தனாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். புதிய நடைமுறை ஆரம்பிக்க வேண்டாம். கரூர் போக பயமாக இருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனக்கூறுவது தமிழகத்தை நாமே தாழ்த்தி கொண்டு போவது ஆகிவிடும். எனது பேச்சை திரிக்க வேண்டாம். கரூர் செல்வதற்கு காவல்துறை எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என தெரியவில்லை.
இன்னும் காலம்
அதிமுக தவெக கூட்டணி குறித்த பேச விரும்பவில்லை. யார் வருவார்கள், யார் செல்வார்கள் என தெரியாது எது நடந்தாலும் தமிழகத்துக்கு நல்லது நடக்கட்டும். எனது நிலைப்பாடு தெரியும். பொறுத்திருப்போம் 2026 தேர்தலுக்கு இன்னும் தூரம் உள்ளது. யார் எப்படி வருவார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
வெளிப்படை இல்லை
சென்னையில் திருமாவளவன் கட்சித் தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியுமா? ஒரு இடத்தில் அவரின் தொண்டர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அவர் தான் பொறுப்பு. தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வரும் போது அவர்களே தாக்கினால் எப்படி ? திருமாவளவன் நடந்து கொண்ட விதம் தவறு. இதை சொன்னால், எங்களையே திட்டுகிறார்கள்.
உண்மையைத் தான் கூறுகிறோம். கட்சி தொண்டர்கள் செய்த தவறுக்கு காவல்துறை ஏன் முட்டுக் கொடுக்கிறது எனத் தெரியவில்லை. வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். கோவையில் உறுதிமொழி எடுக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடலாமே. கூட்டணி கட்சி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனறால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.
ஆதவ் அர்ஜூனாவை ஏன் திருமாவளவன் கட்சியை விட்டு அனுப்பினார்? இன்னும் ஏன் நட்புடன் இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிப்படையாக தெரியவில்லை. அவரது ஓட்டுகள் வேறு கட்சிக்கு செல்கிறது என்ற யூகத்தில் பாஜவை விமர்சிக்கிறார். அவரது கட்சி தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திருமாவளவனுக்கு உள்ளது. எங்களுக்கு இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்