ADDED : அக் 31, 2025 03:47 AM

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி:
என் தாத்தா முத்துராமலிங்கத் தேவருக்கு, தங்க கவசம் சாத்தியுள்ளனர். அதை நான் வெறுக்கிறேன். காரணம், அவர் தன் வாழ்நாளில், ஒரு பொட்டு தங்கம் கூட அணியாதவர். சிலுக்கு ஜிப்பா போட்டதை வீசி விட்டு, கதருக்கு மாறிய எளிய மகன்.
ஆனால், அவரை தங்களுடைய ஓட்டு வங்கியாக மாற்ற முயற்சித்து, அவர் விரும்பாததையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர் யாருக்கும் ஓட்டு இயந்திரம் அல்ல. அவரின் வாழ்க்கையை படித்துப் பார்த்து, அவரை வழிபடும் தெய்வமாக மட்டும் பாருங்கள்.
ஒவ்வொரு அரசியல் தலைவரும், தான் செய்த தவறை மறைக்க, தேவர் திருமகனை, தங்கத்தால் மறைக்க முயல்கின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததே நிறத்தில் தானே தவிர, தங்கத்தில் அல்ல என்று சொன்னவர் முத்துராமலிங்கத் தேவர். அப்படிப்பட்டவரைப் போய், தங்கத்தில் மறைக்கப் பார்ப்பது வெட்கமாகவும், கூச்சமாகவும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

