ADDED : அக் 31, 2025 03:35 AM
சென்னை:  கரூர் செல்ல போலீஸ் அனுமதி கேட்ட த.வெ.க., மாநில நிர்வாகிகள், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, எந்த பிரச்னையும் இன்றி  சென்று வந்தனர்.
த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச் செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து, விஜய் ஆறுதல் கூறினார். விஜய் கரூர் செல்ல போலீஸ் அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக, த.வெ.க., நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இதை காரணம் காட்டி, அவர்களும் கரூர் பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு சென்று, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர், நேற்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு போலீஸ் அனுமதி இல்லாமலே, மாநில நிர்வாகிகள் சென்று வந்துள்ளனர். அதேபோல, கரூருக்கும் சென்று வர முடியும். ஆனால், போலீஸ் அனுமதி கிடைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பதைபோல, த.வெ.க.,வினர் பிடிவாதமாக உள்ளனர். இதை, தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

