ADDED : நவ 16, 2025 03:13 AM

அயோத்தி: அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி, 22ல் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர், மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி உட்பட பல பா.ஜ., முதல்வர்கள் பங்கேற்றனர்.
ராமர் கோவில் இப்போது முழுதுமாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 150 அடி உயரமான, துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது. இம்மாதம் 25ம் தேதி, இது ஒரு பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மற்ற முதல்வர்களும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார். இதற்காக, அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளதாம்.
தமிழக முதல்வருக்கும் அழைப்பிதழ் உண்டு. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போதும், தமிழக முதல்வருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் பங்கேற்கவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் அயோத்தி செல்வாரா? ஏற்கனவே, 'ஹிந்து மத விரோதி கட்சி தி.மு.க.,' என, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறுபான்மையினர் அதிக அளவில் ஓட்டளிப்பர்' என சொல்லப்படும் நிலையில், 'அயோத்தி சென்றால் சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், முதல்வர் ஸ்டாலின் அயோத்தி வர மாட்டார்' என்கின்றனர் டில்லி பா.ஜ.,வினர்.
'தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க உள்ள கோவில்களுக்கு சென்று வரும் தன் மனைவி துர்காவை அயோத்திக்கு அனுப்புவாரா முதல்வர்' எனவும், டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.

