ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை கவர்னர் ரவி குற்றச்சாட்டு
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை கவர்னர் ரவி குற்றச்சாட்டு
ADDED : நவ 16, 2025 01:44 AM

சென்னை: ''தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளை, நான் ஆய்வு செய்தேன்; அங்கு மாணவ - மாணவியருக்கு, தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை. விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளன,'' என, கவர்னர் ரவி புகார் தெரிவித்தார்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், நேற்று பழங்குடியினர் பெருமை தினம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக, பழங்குடியின மக்கள் முதன் முதலாக, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினர்.
வடகிழக்கு மாநிலங்களில் பல கிராமங்களில், ஆங்கிலேயேர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், பழங்குடியினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
சுதந்திர போராட்டத்தில், பழங்குடியின மக்களின் பங்கு அளப்பறியது. ஆனால், சுதந்திரம் அடைந்த பின், பழங்குடியின மக்களை நாம் மறந்து விட்டோம்.
அதற்கு முக்கிய காரணம், நாட்டின் முதல் பிரதமருக்கு, ஆலோசனை வழங்குபவராக இருந்தவர், 'இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பழங்குடியின மக்களை ஒதுக்கி விடுங்கள்' என, அன்றைய பிரதமரிடம் கூறியதாகவும், அதன்படியே, அன்றைய பிரதமரும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் தான் இன்றும், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், ஒரு சில பழங்குடியின மாணவ - மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் குழந்தைகள் நிறைய பேர், ஐ.ஐ.டி.,க்கு கல்வி கற்க வர வேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 10 லட்சம் பேர் பழங்குடியினர்.
இந்திய அளவில், தமிழகம் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களிடம், நான் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க ஒரு ஆவணம் கூட இல்லை.
இது, பழங்குடியின மக்களை புறக்கணிக்கும் செயல். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து, பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
பழங்குடியின மக்கள், நம்முடைய கலாசாரத்தின் முன்னோடிகள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளை நான் ஆய்வு செய்தேன். அங்கு மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை. அவர்களுக்கான விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளன.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

