மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : நவ 16, 2025 01:45 AM

சென்னை: ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'தமிழக எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்' சார்பில், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில், 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பெடரேஷனின் பொதுச்செயலர் சேக்கிழார் கூறியதாவது:
மின் வாரிய ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான பேச்சை நிர்வாகம் விரைவாக துவக்கி, ஊதிய உயர்வை விரைந்து வழங்க வேண்டும்.
தற்போது, 65,000 காலி பணியிடங்கள் உள்ளதால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
எனவே, ஐ.டி.ஐ., முடித்தவர்களில், 10,000 பேரை தேர்வு செய்து, களப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். 'கேங்மேன்' பதவியில், 5,000 ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
மின்வாரியத்தில் உயிரிழந்தாலும், ஓய்வு பெற்றாலும் வழங்கப்படும் பணிக்கொடை, 20 லட்சம் ரூபாயை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். அரசின் அனைத்து சலுகைகளையும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தர வேண்டும்.
மின் வாரிய பணிகளுக்கு செலவு செய்ய, அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், ஊழியர்கள் நலன் பாதிக்கிறது. இந்த நிலை இருக்கக் கூடாது. பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

