/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மகளிர் உலகக்கோப்பை: இந்தியா முதல் முறை சாம்பியன்
/
மகளிர் உலகக்கோப்பை: இந்தியா முதல் முறை சாம்பியன்
PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

நவிமும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
![]() |
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.
இதில், டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இறங்கினர். ஆரம்பத்தில் மந்தனா கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். மறுமுனையில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடினார்.
அணியின் ஸ்கோர் 104 ரன்னை எட்டிய போது, ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), ஹர்மன்ப்ரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மற்றொருபுறம் கடைசி வரை விளையாடிய தீப்தி சர்மா 58 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் காகா 3 விக்கெட்டுகளும், மலபா, டி கிளெர்க், டிரையன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
298 ரன்னை இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ப்ரிட்ஸ் 23 ரன்னிலும், போஸ்ச் ரன் எதுவுமின்றியும், ஆட்டமிழந்தனர்.
பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் கலக்கினார். லுஸை 25 ரன்னிலும், காப்பை 4 ரன்னிலும் அவுட்டாக்கினார்.
தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை ஐ.சி.சி., தொடரில் மூன்றாவது முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, இன்று முதல் கோப்பை வென்று சாதித்தது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஷபாலி வர்மா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

