இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
ADDED : நவ 06, 2025 07:32 PM

மும்பை: இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை எனவும், இதற்காக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மும்பையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மற்றும் பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வங்கிகள் அமைப்பு சார்ந்த கடன் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். நிதி கட்டுப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் பின்பற்ற வேண்டிய பல சுயசார்பு நடவடிக்கைகள் இன்னும் உள்ளன. அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கச் செய்வது என்பது வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இதனை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன.
இந்தியாவிற்கு மிகப்பெரிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

