2025ல் அதிகளவு வெளிநாட்டு பயணம்: ஆய்வில் முந்தினர் இளம் தலைமுறையினர்
2025ல் அதிகளவு வெளிநாட்டு பயணம்: ஆய்வில் முந்தினர் இளம் தலைமுறையினர்
ADDED : டிச 20, 2025 12:57 AM

புதுடில்லி: இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு பயணங்களை, 'ஜென் - ஜி' எனப்படும் இளம் தலைமுறையினர் மற்றும் 'மில்லெனியல்ஸ்' என அழைக்கப்படும் அதற்கு முந்தைய தலைமுறையினர் மேற்கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 1997 - 2012 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள், 'ஜென் - இசட்' அல்லது 'ஜென் - ஜி' தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இளம் தலைமுறையான இவர்கள், இணையதளம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து வளர்ந்தவர்கள்.
தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள ஜென் - ஜி தலைமுறையினர், பன்முகத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மாற்றத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தனி பயணம்
அதேபோல், 1980ல் இருந்து 1990களின் நடுப்பகுதி வரை பிறந்தவர்கள், மில்லெனியல்ஸ் என அழைக்கப்படுகின்றனர்.
'ஜென் - ஒய்' என்றும் அழைக்கப்படும் இவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்தவர்கள் என அறியப்படுகின்றனர். வேலை, பொருளாதாரம், சமூக மாற்றம் மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள்.
நடப்பாண்டில், இந்த இரு தலைமுறையினரும் அதிகளவு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பயணவங்கி நிதிதொழில்நுட்ப தளமான 'நியோ' ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை அறிவித்துள்ளது.
மொத்தம், 10 லட்சம் பயணியரின் தரவுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்த ஆண்டில், 10 வெளிநாட்டு பயணங்களில் ஒன்பதை, ஜென் - ஜி மற்றும் மில்லெனியல் தலைமுறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணங்களில், மூன்றில் இரண்டு பங்கு, டில்லி, பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரும்பாலான இந்திய பயணியர், தனியாக பயணிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். மொத்த பயணங்களில், தனிநபர் பயணங்கள், 63.8 சதவீதம் பேரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தம்பதியர், 19.93 சதவீதம்; குடும்பங்களாக சென்றவர்கள், 12.26 சதவீதம்; குழுக்களாக, 4.01 சதவீதம் பேர் பயணித்துஉள்ளனர்.
விருப்ப நாடுகள்
இது, இந்திய பயணியர் சுதந்திரமான பயணத்தை விரும்புவதையே காட்டுகிறது. ஆசிய நாடுகளில் உள்ள குறுகியதுார சுற்றுலா தலங்கள், இவர்களின் அதிகபட்ச தேர்வாக இருந்துள்ளன.
தாய்லாந்திற்கு 23.08 சதவீதத்தினரும், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 21.57 சதவீதத்தினரும், ஜார்ஜியாவுக்கு 9.65 சதவீதத்தினரும் பயணித்துஉள்ளனர்.
மலேஷியாவுக்கு 8.89 சதவீதத்தினர், பிலிப்பைன்சுக்கு 8.8 சதவீதத்தினர், கஜகஸ்தானுக்கு 7.38 சதவீதத்தினர், வியட்நாமுக்கு 5.87 சதவீதத்தினர் பயணித்தனர்.
உஸ்பெகிஸ்தானுக்கு 5.6 சதவீதம் பேரும், பிரிட்டனுக்கு 5.38 சதவீதம் பேரும், சிங்கப்பூருக்கு 3.78 சதவீதம் பேரும் சென்றுள்ளனர். வெளிநாடு சென்ற இந்தியர்கள், 'ஷாப்பிங்' செய்ய அதிகமாக, அதாவது 47.28 சதவீதம் செலவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உணவுக்கு 20.69 சதவீதமும், போக்குவரத்துக்கு 19.93 சதவீதமும், தங்குமிடத்துக்கு 9.09 சதவீதமும், பிற செலவினங்களுக்கு 3.01 சதவீதமும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

