ADDED : மார் 02, 2025 02:33 AM

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கணேஷ், லோக்சபாவின் இணை இயக்குநராக உள்ளார். விளம்பரம் மற்றும் பத்திரிகையாளர் தொடர்பு ஆகியவற்றை கவனிப்பது தான் இவரது பணி.
பத்திரிகையாளர்களுக்கு லோக்சபாவில் அமர்ந்து நடவடிக்கைகளைப் பார்த்து, 'ரிப்போர்ட்' செய்ய, சிறப்பு அடையாள அட்டை தேவை; இதை, இவர் தான் வழங்கவேண்டும். இதனால், இவருக்கு தெரியாத பத்திரிகையாளர்களே கிடையாது.
குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தெரிந்த பத்திரிகையாளர்களுடன் நட்புடனும், எப்போதும் புன்சிரிப்புடனும் பழகுவார். கடந்த 25 ஆண்டுகளில் பல சபாநாயகர்களையும், பிரபல சீனியர் பத்திரிகை ஆசிரியர்களையும் பார்த்துள்ளார்.
அத்துடன், தமிழக எம்.பி.,க்களுக்கு எந்த ஒரு உதவி தேவை என்றாலும் உடனே உதவிக்கு வருபவர் இவர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் நெருக்கம் அதிகம். இந்தாண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறும் கணேஷுக்கு, ஓராண்டு பதவி நீட்டிப்பு தருவதாக சொன்னாராம் ஓம் பிர்லா; ஆனால் மறுத்துவிட்டார் கணேஷ்.
'முன்பெல்லாம் தமிழக எம்.பி.,க்கள் சபை நேரம் தவிர, மற்ற சமயங்களில் பார்லிமென்ட் நுாலகத்தில் அதிக நேரம் செலவிடுவர். ஆனால், இப்போது அவர்கள் கேன்டீனில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்' என்கிறார் கணேஷ்.
ஓய்வு பெற்றதும், தன் அனுபவத்தை புத்தகமாக எழுத இருக்கிறார். மறைந்த சபாநாயகர் பாலயோகி உட்பட பல சபாநாயகர்களுடன் பணியாற்றியவை குறித்து விரிவாக எழுதப் போகிறாராம். தமிழக எம்.பி.,க்கள் அப்போதும், இப்போதும் எப்படி செயல்பட்டனர் என்பது குறித்தும் எழுதப்போகிறாராம்.