பிரசாரத்தை ஏன் நிறுத்தவில்லை? விஜய் தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி
பிரசாரத்தை ஏன் நிறுத்தவில்லை? விஜய் தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி
ADDED : அக் 01, 2025 05:12 AM

கரூர் : ''திரையுலகில் டாப் ஸ்டாராக இருப்பவர் விஜய். அவரது கூட்டத்துக்கு, 10 ஆயிரம் பேர்தான் வருவர் என எப்படி கணித்தீர்கள். கூட்டம் அதிகமானவுடன் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை,'' என, கரூர் நீதிபதி பரத்குமார், விஜய் தரப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த, த.வெ.க., பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறல் காரணமாக, 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அளித்த புகார்படி, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, நேற்று கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
மனு தாக்கல் அப்போது, 'த.வெ.க., பிரசாரக் கூட்டத்துக்கு கேட்ட இடம் கிடைக்காததால், வேலுச்சாமிபுரத்தில் போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, போலீசார்தான் காரணம் என்பதால், த.வெ.க., நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கரூர் டவுன் போலீசார் சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'நிபந்தனைகளை த.வெக., உயர்மட்ட நிர்வாகிகளிடம் எடுத்து கூறியும், அவர்கள் கேட்கவில்லை. இதனால், ஜாமின் வழங்கக் கூடாது' எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது நீதிபதி பரத்குமார், 'விஜய் டாப் ஸ்டார் அவரது கூட்டத்துக்கு, 10 ஆயிரம் பேர்தான் வருவர் என எப்படி கணித்தீர்கள், முதல்வர், பிற கட்சி தலைவர்களுடன் விஜயை ஒப்பிடக்கூடாது, கூட்டம் அதிகமானவுடன் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை.
அதிக கூட்டம் வரும் என, விஜய்க்கு சொல்லப்பட்டதா, அவர் கூட்டத்துக்கு குழந்தைகளும் வருவர் என்பதால் ஏன், மைதானம் போன்ற இடத்தை கேட்டு, அங்கே கூட்டத்தை நடத்தவில்லை. இதில் எந்த ஆவணத்தையும் பார்க்கத் தேவையில்லை; மனசாட்சிப்படி உத்தரவு அளிப்பேன்' என்றார்.
அதற்கு, த.வெ.க., வழக்கறிஞர்கள், 'கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டாலும், பொதுமக்களை தடுக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. கூட்டம் நடந்த இடத்தில், திறந்திருந்த சாக்கடை குழிகளை அட்டை வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
கைது செய்யக்கூடாது
கூட்டத்துக்கு, எதிர்பார்த்த எண்ணிக்கையைக் காட்டிலும், பொதுமக்கள் அதிகம் பேர் வந்தனர். கூட்ட நெரிசலுக்கு பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை, த.வெ.க., தரப்பில் யாரையும் கைது செய்யக்கூடாது' என, கூறினர்.
இறுதியாக போலீஸ் தரப்பில், '41 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது, விஜய் பிரசாரக் கூட்டத்திற்காக, போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது, கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், அமராவதி பாலம் உள்ளதால் அனுமதி அளிக்கவில்லை; கேட்ட நேரத்தின்படி, மதியம் 3:00 மணிக்கு விஜய் கரூர் வந்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது, பிரசார வாகனம் குறிப்பிட்ட இடத்தை விட, தள்ளி நிறுத்தப்பட்டது, முனியப்பன் கோவில் அருகே, விஜய் பிரசார வாகனத்துக்கு உள்ளே சென்று விட்டார்.
'அந்த பகுதியில் விஜயை பொதுமக்கள் பார்த்துவிட்டு, கலைந்து சென்று இருப்பர். போலீசாரின் அறிவுரைகளை, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கேட்கவில்லை; அதனாலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மக்கள் மிதியடிப்பட்டு, மூச்சு திணறி இறந்துள்ளனர்' என விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன் ராஜ் ஆகிய இருவரை வரும், 14 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.