UPDATED : ஆக 08, 2024 07:19 AM
ADDED : ஆக 08, 2024 01:28 AM

ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு, செப்., 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில், பா.ஜ., மற்றும் காங்., கூட்டணி இடையே போட்டி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்றதைத் தொடர்ந்து, 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தவிர, ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு ராஜ்யசபா எம்.பி.,க்கள் கட்சி மாறியதால், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, இந்த 12 இடங்களுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கட்டாயத்தில் பா.ஜ.,
தற்போது ராஜ்யசபாவில் உள்ள 245 இடங்களில், பா.ஜ.,வுக்கு 86 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 101 எம்.பி.,க்களும் உள்ளனர். பெரும்பான்மைக்கு, 113 இடங்கள் தேவை.
இந்நிலையில், 12 ராஜ்யசபா இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், தன் பலத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அதிகரித்துக்கொள்ள முடியும். பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு, ராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., கூட்டணி உள்ளது.
தெலுங்கானாவில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்த கே.கேசவ ராவ், காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். இங்கு, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால், காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தில் இருந்த மம்தா மொஹந்தா, பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது அங்கு பா.ஜ., ஆளுங்கட்சியாக உள்ளதால், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கலே இல்லை.
அதுபோல, அசாம், பீஹாரில் தலா இரண்டு இடங்கள் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுராவில் தலா ஒரு இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ளதால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மஹாராஷ்டிராவில் இரண்டு மற்றும் ஹரியானாவில், ஒரு இடத்துக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசே அமைந்துள்ளது. இருப்பினும், அங்கு காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியும் வலுவாக உள்ளது.
சலசலப்பு
இந்த இடைத்தேர்தல், ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அதாவது, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களுடைய முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு என்பதை குறிக்க வேண்டும். அதன்படியே, வேட்பாளர்கள் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இதன்படி, அசாம், பீஹார், திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசாவில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவதில் பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஹரியானாவில் 87 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், பா.ஜ.,வுக்கு 41 பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு, 29 பேர் உள்ளனர்.
லோக்சபா தேர்தலின்போது, ஆளும் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய, ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஐந்து சுயேச்சைகளும், இந்திய லோக் தளம் மற்றும் ஹரியானா லோஹித் கட்சிக்கு, தலா ஒரு எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
மஹாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., கூட்டணிக்குள் சலசலப்பு உள்ளது.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த பிப்., மாதத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் இருந்தபோதும், பா.ஜ., வேட்பாளர் வென்றார். காங்கிரசைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் மூன்று சுயேச்சைகள் ஆதரவால் பா.ஜ., வென்றது.
எதிர்பார்ப்பு
அதுபோன்று, கட்சி மாறி ஓட்டளிக்கும் வாய்ப்பு, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த மாநிலங்களில், இண்டி கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அவ்வாறு நிறுத்தினால், கடும் போட்டி நிலவும். இந்த இரண்டு மாநிலங்களிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -