ADDED : ஏப் 21, 2024 03:25 AM

'இந்தியாவை காக்க எங்களுக்கு ஓட்டளியுங்கள்' என, தி.மு.க., தேர்தல் பிரசாரத்துடன் விளம்பரமும் செய்தது. ஆனால், தமிழகத்தை விட்டு தி.மு.க., தலைவர்கள் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் விரும்பவில்லை என்ற தகவல், தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் உட்பட, சில தமிழக பா.ஜ., கூட்டணி தலைவர்கள், வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், தமிழர்கள் அதிகம் உள்ளதால் அங்கு இவர்கள் பிரசாரம் செய்வர்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது; ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை. இந்நிலையில், தமிழக இண்டியா கூட்டணி தலைவர்கள், 'டில்லி பக்கமோ, வடமாநில பக்கமோ தயவு செய்து பிரசாரத்திற்கு வர வேண்டாம். ஜூன் 4 வரை தமிழகத்திலேயே இருக்கவும்' என, தி.மு.க., தலைமைக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.
சனாதனம் குறித்து, தி.மு.க., தலைவர்கள் பேசியதை வடமாநிலத்தில், பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டு வருகிறது. 'ராமரை எதிர்க்கும் கட்சி தி.மு.க., 'இண்டியா' கூட்டணியும், ராமருக்கு எதிரானது' என, பா.ஜ., தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
'இதனால், தி.மு.க., தலைவர்கள் தமிழகத்திலேயே இருப்பது தான் கூட்டணிக்கு நல்லது' என, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தி.மு.க., தலைமைக்கு சொல்லி விட்டாராம்.

