சனாதன விவகாரம் வெடிக்கும் என்பதால் வட மாநிலங்களில் ஸ்டாலின் பிரசாரம் இல்லை
சனாதன விவகாரம் வெடிக்கும் என்பதால் வட மாநிலங்களில் ஸ்டாலின் பிரசாரம் இல்லை
UPDATED : மே 01, 2024 05:03 AM
ADDED : ஏப் 30, 2024 11:10 PM

வட மாநிலங்களில், 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் போகப் போவதில்லை என்றும், தி.மு.க.,வின் சனாதன எதிர்ப்பு விவகாரமே, அதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போல, சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி' என்றார்.
அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு, நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'சனாதன தர்மத்தை இண்டியா கூட்டணி அவமதிக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், தி.மு.க.,வும், ஓட்டு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றன' என, பா.ஜ., தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, 'எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது' என, அமைச்சர் உதயநிதியை, இண்டியா கூட்டணி தலைவர்கள் அறிவுறுத்தினர்.
லோக்சபா தேர்தலில், வட மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த போது, அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சை மேற்கோள் காட்டி பேசினார். இது, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வடமாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசார திட்டத்தை, தி.மு.க., மூத்த எம்.பி., தயாரித்துள்ளார். அதை கூட்டணி தலைவர்களுக்கு அனுப்பி, உள்ளனர்.
வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டால், அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சை, பா.ஜ., தலைவர்கள் கிளப்புவர். இதனால், பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் ஓட்டுகள், இண்டியா கூட்டணிக்கு எதிராக திரும்பி விடும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டணி தலைவர்கள் கருதுகின்றனர்.
அதையடுத்து, உ.பி., சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரும்,தி.மு.க., மூத்த எம்.பி., யிடம் பேசியுள்ளனர்; 'தி.மு.க., தலைவர்களின் பிரசாரம் வட மாநிலங்களில் தேவையில்லை' என்று கூறியுள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்டாலின் செல்லவில்லை. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிற தொகுதிகளிலும், காவிரி நீர் பிரச்னையை காரணம் காட்டி, பிரசாரத்திற்கு அழைக்கவில்லை.
அதேபோல, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், 'சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. அதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதனால், அம்மாநிலத்திலும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.
- நமது நிருபர் -