ADDED : மார் 24, 2024 03:31 AM

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவால் கைதாகியுள்ளார். மக்கள் மத்தியில் இவருக்கு அனுதாப அலை வீசும். இது பா.ஜ.,வின் வெற்றியைக் கடுமையாக பாதிக்கும்' என, ஆம் ஆத்மி கட்சியினர் சொல்கின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூட, 'இந்த சமயத்தில் கைது தேவை தானா' என, வெளியே சொல்லாமல், நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுகின்றனர்.
ஆனால் பா.ஜ., தலைமை எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. 'இது பா.ஜ.,வை பெருமளவில் பாதிக்கும்' என, பலரும் கூறினர். ஆனால், கட்சி தலைமை அதைப் பற்றி கவலைப்படவில்லை. விளைவு-, அதிக தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசின் சீனியர் டில்லி தலைவர்களான, அஜய் மாகன் உட்பட பலர், 'மதுபான ஊழலில் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்டுள்ளார்' என, கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இப்போது கெஜ்ரிவால் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அப்படியே பிளேட்டை மாற்றி, 'மோடியின் அராஜகம்' என, சொல்கின்றனர் இந்த காங்., தலைவர்கள்.
'மதுபான ஊழல் வழக்கில், ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தவிர, டில்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் கைதை தடுக்க மறுத்து விட்டது; அத்துடன், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், ஊழலை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
'கெஜ்ரிவாலின் சகாக்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் இதே ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்; அவர்களுக்கு ஜாமின் வழங்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 'இதையெல்லாம் பார்க்கும் போது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசாது' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

