ADDED : மே 03, 2024 01:04 AM

''குடிமக்கள் ஒவ்வொரு வரும் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அப்படிப்பட்ட தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு முடிந்த, 11 நாட்களுக்கு பின், பதிவான ஓட்டு சதவீதத்தை அறிவிப்பது ஏன்,'' என, ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நேற்று டில்லியில் ராஜ்யசபா எம்.பி.,யும், காங்கிரசில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருபவருமான கபில் சிபல் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 'குடிமக்கள் ஒவ்வொருவரும் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதை ஏற்கிறோம். ஆனால், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், எவ்வளவு ஓட்டுக்கள் பதிவாகின என்பதை உடனடியாக தேர்தல் கமிஷன் சொல்லியிருக்க வேண்டுமா, வேண்டாமா?
முதற்கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து 11 நாட்கள் கழித்து, ஓட்டுப்பதிவு சதவீதத்தை தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறதே; இந்த செயல் சரியா என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வர்.
முதற்கட்டத் தேர்தல் முடிந்து 11 நாட்களுக்கு பின் வெளியான அறிவிப்பில், பதிவான மொத்த ஓட்டுகள் எவ்வளவு என்ற விபரம் இல்லை. மாறாக, பதிவான ஓட்டுகளின் சதவீதத்தை மட்டும் தேர்தல் கமிஷன்வெளியிடுகிறது.
இதற்கான காரணம் என்ன என்பது புரியவில்லை. ஏன் 11 நாட்கள் தாமதம் ஆனது என்பது குறித்து தேர்தல் கமிஷன் தானாகவே முன்வந்து செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும். அதில், விரிவான தகவல்களுடன் முழு விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து தெளிவு பெறலாம் என்று நினைத்து, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் பலரிடமும் பேசினேன்.
அவர்கள் அனைவருமே,'ஓட்டுப்பதிவு நடக்கும் அதேநாளில் அல்லது அடுத்த நாள் காலையில், பதிவான ஓட்டுகள் குறித்து மொத்த விபரங்களும் முழுவதுமாக அறிவிக்கப்படுவதே வழக்கம்' என்று தெரிவித்தனர். அப்படியானால், இந்த தேர்தலில் மட்டும், 11 நாட்கள் காலதாமதம் ஆனது ஏன்? இவ்வாறு அவர், கூறினார்.
- நமது டில்லி நிருபர் -