மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது
மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது
UPDATED : ஆக 03, 2024 07:27 AM
ADDED : ஆக 03, 2024 01:05 AM

சென்னை: கடந்த மாதம் வறண்டு கிடந்த காவிரி, தற்போது கர்நாடகாவில் ஆர்ப்பரித்து வெள்ளமாக ஓடோடு வருகிறது. பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த மேட்டூர் அணைப் பகுதி இப்போது ததும்பி வழிவதால், இரண்டு நாட்களில் 27 டி.எம்.சி., உபரி நீர் வெளியேற்றப்பட்டு விட்டது.
சேலம் மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அணை நிரம்பியுள்ளதால், 1ம் தேதி, வினாடிக்கு 1.67 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும், 27.1 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. வெள்ள சேதத்தை தவிர்ப்பதற்காக, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் நீரை சேமிக்கும் வகையில், கடலுார் - மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஆதனுார் - குமாரமங்கலம் இடையே, கதவணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது.
இதில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 31.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக, நீர்வளத்துறையினர் கூறி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்க முடியாததால், கதவணையை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதேபோல, கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, நஞ்சை புகளூர் என்ற இடத்தில், 406 கோடி ரூபாயில் கதவணை கட்டும் பணி நடக்கிறது. இதில், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய பணிகள் இழுபறியில் உள்ளன.
இந்த இரண்டு கதவணை பணிகளை முடித்திருந்தால், அவற்றில் நீரை தேக்கி பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்க முடியும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். ஆனால், பணிகளை முடிப்பதற்கு நீர்வளத்துறையினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு உள்ள நீரில், அதிகளவு கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.
அண்ணாமலை கிண்டல்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கொள்ளிடம் ஆற்றில் தி.மு.க., ஆட்சியில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை' என, தெரிவித்துள்ளார். 'கிணற்றை காணவில்லை' என, நடிகர் வடிவேலு, திரைப்படம் ஒன்றில் கூறும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.