எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் பயன்பாடு 50 சதவீதம்: தமிழகத்தில் கோழித்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் பயன்பாடு 50 சதவீதம்: தமிழகத்தில் கோழித்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
UPDATED : பிப் 26, 2025 04:49 AM
ADDED : பிப் 26, 2025 01:17 AM

'எத்தனால் உற்பத்திக்கு, 50 சதவீதம் வரை மக்காச்சோளம் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், தமிழகத்தில், கோழித்தீவனத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்வதுடன், உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பண்ணையாளர்கள், தீவன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோழி மற்றும் கால்நடை தீவனங்களில் மக்காச்சோளம், 10 - 70 சதவீதம் வரை சேர்க்கப்படுகிறது. மக்காச்சோளத்தில் உள்ள, 'சாந்தோப்பில்' என்ற வேதிப்பொருள், முட்டையின் மஞ்சள் கரு நிறத்திற்கும், கறிக்கோழிகளில் தரமான புரதச்சத்துக்கள் உருவாவதற்கும் அடிப்படையாக அமைகிறது.
30 லட்சம் டன்
கோழிகளுக்கு தேவையான, 'கார்போஹைட்ரேட்' 60ல் இருந்து, 70 சதவீதமும், புரதச்சத்து 20ல் இருந்து, 30 சதவீதமும், மக்காச்சோளம் வாயிலாக கோழித்தீவனங்களில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில், கோழித்தீவன உற்பத்தியில், ஆண்டிற்கு, 20 மில்லியன் டன் மக்காச்சோளம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீவன உற்பத்தியில் முக்கியமாக உள்ள மக்காச்சோளத்தின் விலை, ஆண்டுதோறும் சராசரியாக, 18 சதவீதம் வரை உயர்ந்து வருவது, தீவன உற்பத்திக்கான செலவை அதிகரித்துள்ளது.
'மக்காச்சோள உற்பத்தி இந்தியாவில், இந்தாண்டில், 36 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும்' என, மத்திய அரசின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகா, மத்திய பிரதேசம், பீஹார் மாநிலங்களை தொடர்ந்து, வரும் ஆண்டில், தமிழகத்தில், 30 லட்சம் டன் மக்காச்சோள உற்பத்தி கிடைக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக தேவைக்காக, கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படுவதன் வாயிலாக, தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த, 2022-23ல், ஒரு மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளம், எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. அது, 2023 - 24ல், ௭ மில்லியன் டன்னாக அதிகரித்தது. வரும், 2024-25ல், 13 மில்லியன் டன்னுக்கும் அதிகமான மக்காச்சோளம், எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. காரணம், மக்காச்சோளம் மூலம் பெறப்படும் எத்தனால், லிட்டர் ஒன்றுக்கு அதிகப்படியான விலை, 71 ரூபாய்க்கு மேல் கிடைப்பதால், அதிகளவில் மக்காச்சோளம் வரும் காலங்களில் எத்தனால் உற்பத்திக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தீவன உற்பத்தியாளர்களிடையே மக்காச்சோள பற்றாக்குறை பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி கூறியதாவது: வேளாண் நிபுணர்களின் கூற்றுப்படி, வரும், 2024-25ல், இந்தியாவிற்கு கூடுதலாக, 14 மில்லியன் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. இதில், 10 மில்லியன் டன் எத்தனால் உற்பத்திக்கும், கூடுதலாக நான்கு மில்லியன் டன் கோழித்தீவன உற்பத்தி, உணவு மற்றும் ஸ்டார்ச் உற்பத்திக்கும் தேவைப்படுகிறது.
விலை உயரும்
ஆனால், இந்தியாவில் வேளாண் துறையின் முயற்சியால், நான்கு மில்லியன் டன் வரை மட்டுமே அதிகரிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், மக்காச்சோளத்தின் விலை மேலும் உயரும் நிலை உள்ளது. இது மக்காச்சோள இறக்குமதி அளவை அதிகரிக்கும் சூழலையும் ஏற்படுத்தும். மக்காச்சோளம், தென் ஆப்பரிக்கா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் காரணமாக, இறக்குமதியும் குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை.
பற்றாக்குறை
மக்காச்சோள இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு, 15 சதவீதம் வரை நிர்ணயித்திருப்பதால், இறக்குமதி செய்யும் மக்காச்சோளத்தின் விலையும் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக, வரும் காலங்களில் மக்காச்சோளத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது, 25, 26, 27 ரூபாய் என்ற அளவில் இருக்கும் விலை, 31 ரூபாய் அதற்கு மேல் விலை உயர வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், எத்தனால் உற்பத்தியில், 50 சதவீதம் வரை மக்காச்சோளத்தை பயன்படுத்த மத்திய அரசு கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, கோழிகள் மற்றும் இதர கால்நடைகளுக்கான தீவனங்களில் சேர்க்கப்படும் மக்காச்சோளத்திற்கு, அதிகளவில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், மத்திய அரசு மக்காச்சோள விளைச்சலை அதிகரிப்பதற்கான செயல் திட்டங்களை முறையாக வகுத்து, அதிகப்படியான மக்காச்சோள விளைச்சலை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மக்காச்சோள பற்றாக்குறை பிரச்னையை மடைமாற்றும் விதமாக, ஆல் இந்தியா டிஸ்டிலர்ஸ் அசோசியேஷன், இந்தியாவில் பல இடங்களில் எத்தனால் எடுத்த பின் கிடைக்கக்கூடிய கழிவான டி.டி.ஜி.எஸ்., மாடுகள், கோழித்தீவனங்களில் குறிப்பிட்ட அளவு சேர்க்கலாம் என்பதை, மாநிலத்தில் உள்ள கால்நடை பல்கலை மற்றும் தீவன உற்பத்தியாளர்களிடையே கருத்துருவை ஏற்படுத்தி வருகின்றன.
இறக்குமதி அவசியம்
டி.டி.ஜி.எஸ்., கழிவுகளில் அதிக மைகோடாக்சின் அப்ளாடாக்சின் பூஞ்சான நச்சுகளும், அதிகளவில் நார் பொருட்களும், சோடியம், சல்பர், காப்பர், ஆன்ட்டி பயோடிக் ஆகியவை உள்ளதால், இதனை குறைந்தளவில், மிகவும் எச்சரிக்கையுடன் கோழி தீவனங்களில் பயன்படுத்த வேண்டும். மக்காச்சோளம் விளைவிக்கும் விளை நிலங்களின் அளவை அதிகப்படுத்துவதுடன், இறக்குமதி வரியின்றி மக்காச்சோளத்தை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே தீவன உற்பத்தி மற்றும் கோழிப்பண்ணை தொழிலை நஷ்டம் இன்றி நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -