சட்டசபையில் விவாதித்திருந்தால் 57 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்
சட்டசபையில் விவாதித்திருந்தால் 57 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்
ADDED : ஜூன் 25, 2024 03:49 AM

கள்ளக்குறிச்சிதொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,செந்தில்குமார்,நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கடந்த ஆறு மாதத்துக்கு முன், கள்ளக்குறிச்சி நகரத்தில் கள்ளச்சாராயம் தங்கு தடையில்லாம எந்நேரமும் கிடைப்பதை நேரில் பார்த்தேன். கருணாபுரம் பகுதியில் வசிப்பவர்கள் கூலி வேலைக்குப் போய் சொற்பமாக சம்பாதிக்கும் தொழிலாளிகள்.
வேலை அசதி காரணமாக, அவர்களுக்கு மது அருந்துவது தேவையாக இருந்துள்ளது. டாஸ்மாக் மது விலை அதிகம் என்பதால், சாராயம் குடிக்கத் துவங்கினர். கல்வராயன் மலைப் பகுதியில் காய்ச்சப்படும் சாராயத்தை வாங்கிட்டு வந்து விற்க ஆரம்பிச்சதும், அதை வாங்கி அருந்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், சாராயத்தில் போதை அதிகம் இல்லை என்றதும், சாராய வியாபாரிகளிடம் போதை அதிகம் உள்ள சரக்கு கேட்டுள்ளனர். அதையடுத்தே, சாராயத்துக்கு பதிலாக மெத்தனால் என்ற வேதிப்பொருளை வாங்கி வந்து விற்க துவங்கிவிட்டனர்.
இந்த அவலத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் சொன்னேன். உடனே, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுக்கும்படி கூறினார். சபாநாயகரை சந்தித்து கூறினேன்.
அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபை வாயிலாக தீர்வு கிடைக்காது என்று முடிவெடுத்த நான், அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் போதைப் பொருள் ஆய்வு கூட்டங்களில், கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்க வலியுறுத்தி பேசியுள்ளேன்.
கடைசியாக போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற போது, கலெக்டர் ஷ்ரவண் குமார் ஜடாவத்திடம் இதுபற்றி கூறினேன். அப்போதைய எஸ்.பி., சமய்சிங் மீனாவிடமும் சொன்னேன்; இருவருமே காது கொடுத்து கேட்கவில்லை.
'எங்களிடம் சொல்லுங்க' என, மகேஷ், ரமேஷ் ஆகிய இரண்டு டி.எஸ்.பி.,க்கள் சொன்னாங்க. விபரீதத்தை அவர்களிடம் கூறினேன். அவர்களும் எஸ்.பி., மற்றும் கலெக்டரிடம் பிரச்னையை சொல்லிவிட்டனர்.
சில நாட்கள் கழித்து, இந்தப் பிரச்னை தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.,யிடம் போனில் பேசினேன். இரண்டு பேரும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்; சொன்னபடி செய்யவில்லை. சபாநாயகர் இந்த பிரச்னையை தீவிரமாக எடுத்து, சபையில் விவாதிக்க அனுமதி கொடுத்திருந்தால், கண்டிப்பாக கள்ளச்சாராய வியாபாரம் தடுக்கப்பட்டிருக்கும். கலெக்டரும், எஸ்.பி.,யும் நடவடிக்கை எடுத்திருந்தாலும், 57 உயிர்கள்பறிபோய் இருக்காது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், இதே போன்ற சம்பவம் நடந்தபோது, 'கள்ளச்சாராய வியாபாரிகள், மெத்தனால் விற்பனை செய்தவர்கள் மீது, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன்' என்றார் முதல்வர். இப்போதும் அதையே சொல்கிறார்.
கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பின்னணியில் தி.மு.க., கரங்கள் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்தாத வரை, கள்ளச்சாராய வியாபார ஒழிப்பு நடவடிக்கை என்பது கண்துடைப்பாகவே இருக்கும்' என்றார்.
- நமது நிருபர் -