மேட்டூர் அணையில் 93 டி.எம்.சி., கையிருப்பு; ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தகவல்
மேட்டூர் அணையில் 93 டி.எம்.சி., கையிருப்பு; ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தகவல்
ADDED : ஆக 14, 2024 04:35 AM

'தற்போதைய சூழ்நிலையில் மேட்டூர் அணையில், 93.470 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது. அணையிலிருந்து 21,472 கனஅடி நீர், காவிரி டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது' என, காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் வினோத் குப்தா தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில், அனைத்து உறுப்பினர்களும் அவர்களது மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்களில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில், இக்குழுவின் உறுப்பினரான திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், 2024 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான நீர் இருப்பு விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மேட்டூர், பவானிசாகர், மற்றும் அமராவதி ஆகிய அணைகளில் உள்ள தற்போதைய நீர் அளவின் கையிருப்பு, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு ஆகிய விபரங்கள் அனைத்தும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதே காலக்கட்டத்தில் தமிழகம் - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் வந்து கொண்டிருந்த நீரின் அளவு பற்றிய விபரமும் பகிரப்பட்டது.
இந்த காலகட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, 56.735 டி.எம்.சி., நீர் வந்திருக்க வேண்டும். ஆனால், மழைப்பொழிவு காரணமாக இதற்கு பதிலாக, 153.809 டி.எம்.சி., வரையில் தமிழகத்திற்கு நீர் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 'இதன்படி, 97 டி.எம்.சி., உபரி நீர், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டு உள்ளது.
'காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக, இது தமிழகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது' என, தமிழக பிரதிநிதிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மேட்டூர் அணையில் தற்போது, 93.470 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது என்றும், அணையில் இருந்து 21,472 கனஅடி நீர், காவிரி டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, 2024 - 25ம் ஆண்டில் தென்மேற்கு பருவ மழையானது, ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை காவிரிப்படுகையில் இயல்பான அளவை விட அதிகமான அளவில் பெய்துள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் உறுப்பினரும் தெரிவித்தார்.
இதையடுத்து, 'இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான நிலையில் இருப்பதால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பங்கீட்டு நீரை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, தமிழகம் - கர்நாடகா எல்லையான பில்லி குண்டுலுவில், வரும் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
இதை, கர்நாடகா உறுதி செய்ய வேண்டும். அதற்கான உத்தரவை காவிரி ஒழுங்காற்று குழுவும், ஆணையமும் பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -