தேர்தலுக்கு ஒரு பூத்து... கோவையில் தான் இந்த கூத்து!
தேர்தலுக்கு ஒரு பூத்து... கோவையில் தான் இந்த கூத்து!
ADDED : ஏப் 26, 2024 07:16 AM

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, கோவை லோக்சபா தொகுதியில் தான், வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூன்று சட்டசபை தொகுதிகளில் உள்ள மாநகர பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்துள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு ஒன்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேறொன்று, லோக்சபா தேர்தலுக்கு புதிதாக ஒன்று என, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதே இதற்கு காரணமாக தெரிகிறது.
இதன் காரணமாக, ஒரே வீட்டிலுள்ள வாக்காளர்களின் பெயர் விடுபடுவது, ஒரே முகவரியில் வசிக்கும் மூன்று பேருக்கும் மூன்று ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்படுவது என புதுப்புது குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
உதாரணமாக, மாநகராட்சி 39வது வார்டில் குறிஞ்சி வீதியில் இருக்கும் வாக்காளர்களுக்கு, மூன்று தேர்தல்களில் மூன்று ஓட்டுச்சாவடிகள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில், அஜ்ஜனுார் பாரதிய வித்யா பவனிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தொண்டாமுத்துார் ரோடு சின்மயா பள்ளியிலும், லோக்சபா தேர்தலுக்கு லிங்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஓட்டுப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே ஏரியாவிலுள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி ஓட்டுச்சாவடியில், எங்கெங்கோ இருப்பவர்கள் வந்து ஓட்டு போட்டுள்ளனர்.
கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் தான் இந்த குழப்பம் அதிகரித்துள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்சமாக பதிவு செய்யப்படும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை தாண்டும்போது, கூடுதலாக இருக்கும் வாக்காளர்களை, வேறு ஒரு ஓட்டுச்சாவடிக்கு மாற்றும் போது இதுபோன்ற குழப்பம் ஏற்படுவதாக தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய்த்துறையினர் விளக்கம் கூறுகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக சொந்த வீட்டில் குடியிருக்கும் வாக்காளர்களின் பெயர்கள் எப்படி வேறு பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு மாற்றப்படுகிறது என்ற கேள்விகளுக்கு, இவர்களிடம் பதில் இல்லை.
அதேபோல, சொந்த வீட்டில் இருக்கும் ஐந்து வாக்காளர்கள், பல தேர்தல்களில் ஒரே ஓட்டுச்சாவடியில் வாக்களித்த நிலையில், இந்த தேர்தலில் இருவரின் ஓட்டுக்கள் காணாமல் போயுள்ளன.
கோவையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்வதில், அரசு அலுவலர்களின் மெத்தனம் மற்றும் கண்காணிப்பு இல்லாததே இதற்கு காரணமென புகார்கள் எழுந்துள்ளன.
ஆனால், ஆதார் எண்களை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைப்பதே இதற்கு தீர்வு என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பது, கலெக்டரின் கடமை.
-நமது சிறப்பு நிருபர்-

