அமைச்சர்களின் அதிகாரத்தை குறைக்க திட்டம்: மாவட்டங்கள் பிரிப்பு; புதியவர்களுக்கு பொறுப்பு?
அமைச்சர்களின் அதிகாரத்தை குறைக்க திட்டம்: மாவட்டங்கள் பிரிப்பு; புதியவர்களுக்கு பொறுப்பு?
UPDATED : ஆக 13, 2024 06:36 AM
ADDED : ஆக 13, 2024 03:57 AM

இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒருவர் வீதம், 117 மாவட்ட செயலர்களை நியமிக்க, தி.மு.க., திட்டமிட்டு உள்ளதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் அமைச்சர் உதயநிதி சென்னைக்கு திரும்பியதும், இந்த மாற்றம் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
அதற்கு உதவும் வகையில், 117 மா.செ.,க்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் இளைஞர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:
தற்போது கட்சியில் 72 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் மூத்த அமைச்சர்கள், மூத்த மாவட்ட செயலர்கள் பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் மட்டும் மூன்று, நான்கு சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றை பிரித்து, அதிகாரத்தை பரவலாக்கும் விதமாக, புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புது மா.செ.,க்கள் யார்?
ஒரு மாவட்டத்திற்கு இரு சட்டசபை தொகுதிகள் என பிரித்தால், அந்த மாவட்டம் பெரியது; இது சிறியது என்ற பிரச்னை எழாது. புதிய மாவட்டங்களில், உதயநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு தர முடியும்.
அமைச்சர் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் அல்லது ஐ.சி.எப்., முரளி ஆகியோரில் ஒருவர் மா.செ.,வாக நியமிக்கப்படலாம்.
அமைச்சர் சுப்பிரமணியன் வசமிருக்கும் தொகுதிகளை பிரித்து தனி மாவட்டம் ஏற்படுத்தி, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மா.செ., ஆக்கப்படலாம்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 11 சட்டசபை தொகுதிகள் அடங்கிய கட்சி மாவட்டத்திற்கு, தற்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுந்தர் எம்.எல்.ஏ., ஆகியோர் மட்டும் மாவட்ட செயலர்களாக உள்ளனர்.
இவற்றை பிரித்து, புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களுக்கு, படப்பை ஒன்றிய செயலர் மனோகரன், மாணவர் அணி செயலர் எழிலரசன் ஆகியோர் நியமிக்கப்படலாம்.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வசமுள்ள சட்டசபை தொகுதிகளை பிரித்து அமைக்கப்படும் மாவட்டத்திற்கு, ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் அல்லது முன்னாள் எம்.பி., தனுஷ் ஆகியோரில் ஒருவருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது.
உதயநிதி திரும்பியதும்
அமைச்சரும், சிவகங்கை மாவட்ட செயலருமான பெரியகருப்பன், ராமநாதபுரம் மாவட்ட செயலர் காதர் பாட்ஷா இருவரிடமும் தலா நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளதால், அந்த தொகுதிகளை பிரித்து, புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் தலா மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. தலா ஒரு தொகுதியை பிரித்து, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் பெரியசாமியின் மகன் செந்தில்குமார் மற்றும் அமைச்சர் சக்கரபாணியிடம் உள்ள தொகுதிகளை பிரித்து புதிய மாவட்ட செயலர் நியமிக்கப்பட உள்ளார்.
பிரான்ஸ் சென்றிருக்கும் அமைச்சர் உதயநிதி சென்னைக்கு திரும்பியதும், புதிய மாவட்ட செயலர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 16ல் தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -