UPDATED : ஆக 24, 2024 04:30 AM
ADDED : ஆக 24, 2024 02:04 AM

தஞ்சாவூர்:தமிழகத்தில் மக்களால் அறியப்படாத கோவில்களை கண்டறிந்து, அக்கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணி, 2023ல் துவங்கியது.
இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா மேற்பார்வையில், புகைப்படக் கலைஞர் சுகுணா, கார்த்திகேயன், தீபக், ராமசாமி தொல்லியல் ஆய்வு மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இந்த குழுவினர் ஏற்கனவே மதுரை, கோயம்புத்துார், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோவில்களை கண்டறிந்து, டிஜிட்டலில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியாவில், 43,000 கோவில்கள் உள்ளன. இதில் 9,000 கோவில்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. இதில், மக்களால் அதிகம் அறியப்படாத, மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை பராமரிப்பில் இல்லாத பல கோவில்கள் உள்ளன.
அவற்றை ஆய்வு செய்து கோவில்களின் தற்போதைய நிலை, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், கோவிலின் சிறப்பு அம்சங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த உள்ளோம்.
இதுவரை, 300 கோவில்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. டெல்டா பகுதியில் இதுவரை 30 கோவில்களை கண்டறிப்பட்டு புகைப்படம், வரைபடங்களை ஆவணப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.