கால் நுாற்றாண்டில் பசுமை காலி! கோவையில் வைத்த பல லட்சம் மரங்கள் எங்கே?
கால் நுாற்றாண்டில் பசுமை காலி! கோவையில் வைத்த பல லட்சம் மரங்கள் எங்கே?
UPDATED : மே 03, 2024 06:17 AM
ADDED : மே 03, 2024 01:51 AM

கோவையில் வளர்ச்சிப் பணிகளுக்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட பின்பு, அரசும், பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து வைத்த மரங்கள் என்னவாயின என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை நகரம், கடந்த 25 ஆண்டுகளில், மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்த கோவை, இந்த கால் நுாற்றாண்டு காலத்தில், பரப்பளவு, மக்கள் தொகை, வருவாய் என பல விதங்களிலும் வளர்ந்து, மாநிலத்தின் இரண்டாவது நகரமாகவும், தேசிய அளவில் வேகமாக வளரும் நகரமாகவும் அடையாளம் பெற்றுள்ளது.
தொழில் வளம் பெருகிய காரணத்தால், வேலை வாய்ப்பும், மக்கள் தொகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது; அதன் தொடர்ச்சியாக, வாகனங்கள் பெருத்துள்ளன; அதற்கேற்ப, ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன; விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக உருமாறியுள்ளன.
மரணித்த மரங்கள்
வளர்ச்சிப் பணிகளுக்காக, நகரில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006-2011 இடையிலான தி.மு.க., ஆட்சியில், அவிநாசி ரோடு விரிவாக்கத்துக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக, மாற்று மரங்கள் நடப்படும் என்று கூறப்பட்டது; ஆனால் எங்குமே மரங்கள் வளர்க்கப்படவில்லை. ரோடு பணிக்காக வெட்டிய மரத்துக்கு ஒன்றுக்கு பத்தாக மரங்கள் நட வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, அவிநாசி ரோட்டில் வெட்டப்பட்ட மரங்களுக்காக மட்டுமே, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்களை, நெடுஞ்சாலைத்துறை நட்டு வளர்த்திருக்க வேண்டும்; ஆனால் மாற்றாக ஆயிரம் மரங்கள் கூட வைக்கப்படவில்லை. அதேபோல, தடாகம் ரோடு, பொள்ளாச்சி ரோடு போன்ற ரோடுகள் விரிவாக்கத்துக்காகவும் பல ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகியவை, அந்த மரங்களுக்கு மாற்றாக எங்குமே மரங்களை வளர்க்க வில்லை.
வெற்று அறிவிப்புகள்
கடந்த 2010ல் செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் வனத்துறையால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆயிரம் மரங்களைக் கூட வனத்துறை வளர்க்கவில்லை.
ஆட்சி மாற்றத்துக்குப் பின், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் 64 ஆயிரம், 65 ஆயிரம் மரங்கள் நடப்படுமென்று அப்போதிருந்த அமைச்சர்கள் அறிவித்து, அதற்கு விழாக்களும் எடுத்தார்கள். அந்த மரங்களை எங்கே வைத்தார்கள், எவ்வளவு வளர்த்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அரசும், அரசியல்வாதிகளும் தான் இப்படி என்றால், கோவையில் பல்வேறு அமைப்புகளும், மரம் வளர்க்கும் பெயரில் வெறும் 'பப்ளிசிட்டி'யோடு கணக்கை முடித்துக் கொண்டுள்ளன. அவசியமின்றி மரங்களை வெட்டுவது முதலில் நிறுத்தப்பட வேண்டியது மிகமிக முக்கியம்!
-நமது நிருபர்-