முன்கூட்டியே கணித்த அதிகாரி விருப்ப ஓய்வில் சென்றதால் நிம்மதி
முன்கூட்டியே கணித்த அதிகாரி விருப்ப ஓய்வில் சென்றதால் நிம்மதி
UPDATED : ஜூன் 21, 2024 01:02 AM
ADDED : ஜூன் 20, 2024 11:17 PM

'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இங்கு எப்போது வேண்டுமானாலும் சாராயச் சாவுகள் நடக்கலாம். அதற்கு தன்னால் பொறுப்பேற்க முடியாது' என்று புலம்பியபடியே, விருப்ப ஓய்வில் சென்ற, எஸ்.பி., மோகன்ராஜ், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். அவர் பயந்தபடியே, கள்ளச்சாராய மரணம் என்ற கொடூரம் நடந்துள்ளது.
இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2023 துவக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த ஒரு மர்ம மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. அப்போது, மாவட்டத்தில் எஸ்.பி.,யாக இருந்த செல்வகுமார் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார்.
தீவிரம் உணர்ந்து
நேரடி எஸ்.ஐ.,யாக, 1987ல் தேர்வான மோகன்ராஜ், தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சட்டம் - ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில், நேர்மையான அதிகாரியாக பணியாற்றினார்.
சர்ச்சைக்குரிய நேரத்தில், அவரை கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக நியமித்தால், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவார் என அறிந்த, அப்போதைய டி.ஜி.பி., சைலேந்திரபாபு, எஸ்.பி.,யாக இருந்த செல்வகுமாரை மாற்றிவிட்டு, மோகன்ராஜை நியமித்தார்.
எதிர்பார்த்தது போல செயல்பட்டு, சென்சிட்டிவ்வான பிரச்னையை சுமுகமாக அணுகி, மக்கள் கோபத்தைத் தணித்து, மாவட்டத்தை இயல்பு நிலைக்கு, கொண்டு வந்தார். அதன்பின், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி, கள்ளச்சாராய வியாபாரம் நடப்பதை அறிந்து, அதைத் தடுக்கும் தீவிரத்தில் களம் இறங்கினார்.
சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில், அதிக கள்ளச்சாராய விற்பனை நடப்பதை அறிந்து, அதை தடுக்க போலீசாரை முடுக்கி விட்டார். கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்தத் தகவல்கள், அந்தப் பகுதியில் இருந்த தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்குச் சென்றது. அவர்கள் மோகன் ராஜிடம் நேரடியாக பேசி, கள்ளச்சாராய விற்பனை விஷயத்தில் தலையிடாதீர்; வியாபாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மிரட்டி உள்ளனர்.
தடுக்க முடியாது
மேலிடம் வரை புகார் சொன்ன மோகன்ராஜுக்கு, காவல் துறை தலைமையிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவதில்லை. இதனால், மாவட்டத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சார வியாபாரத்தை தடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதோடு, கள்ளச்சாராயாத்தால் மாவட்டத்தில் எந்நேரமும் சாவுகள் நடக்கலாம் என அஞ்சி, புலம்பியபடியே இருந்தார்.
பெரும் சர்ச்சை
ஒரு கட்டத்தில், தான் மாவட்ட எஸ்.பி.,யாக இருக்கும்போது, தன் அதிகார வரம்புக்குள் இருக்கும் பகுதியில் சாராய சாவுகள் நடந்தால், தனக்குத்தான் அவப்பெயரும் சிக்கலும் வரும் என்று அஞ்சினார்.
மோகன்ராஜ், அப்படியொரு பதவியே வேண்டாம் என, ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும் போதே, விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்து, உள்துறை செயலருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம், அப்போது காவல் துறை வட்டாரங்களில், பெரும் சர்ச்சையானது.
கள்ளச்சாராய சாவுகள் ஏற்படலாம் என்பதை கணித்தே மோகன்ராஜ், விருப்ப ஓய்வில் செல்கிறார் என்று, காவல் துறை வட்டாரங்களுக்கு வெளியேயும் தகவல் பரவ, தன் சொந்த பணிகளுக்காக முன் கூட்டியே ஓய்வில் செல்கிறேன் என்று, அரசுத் தரப்பில், மோகன்ராஜிடம் எழுதி வாங்கினர். பின், அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தனர். மோகன்ராஜுவுக்கு பதிலாக ஜெயச்சந்திரன் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
மோகன்ராஜ் கணித்தது போலவே, இப்போதைக்கு கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்து விட்டன. அவர், அன்று சொன்னதை அரசுத் தரப்பில் கேட்டு, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு இத்தனை பெரிய துயரம் நடந்திருக்காது.
மோகன்ராஜின் விருப்ப ஓய்வு முடிவை அன்று கடுமையாக விமர்சித்த காவல் துறை அதிகாரிகள், இன்று அவருடைய கணிப்பு சரி என பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -