ADDED : மார் 03, 2025 05:16 AM

டில்லி சட்டசபையின் தற்போதைய கூட்டத் தொடரில், அம்மாநில முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு, தலைமை கணக்கு தணிக்கையாளரான, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, முந்தைய ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கையால், அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 21 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் விஜேந்தர் குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பின், இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்து, தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும், சி.ஏ.ஜி.,யின் குற்றச்சாட்டு, பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.
மதுபான விற்பனையில் பலவீனமான கொள்கையை உருவாக்கியதுடன், அதன் அமலாக்க சிக்கல்கள் காரணமாக, ஆம் ஆத்மி கட்சி 2021- - 22 காலக்கட்டத்தில் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உரிமம் வழங்கும் நடைமுறையிலும், பல்வேறு விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன. அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார் என்றும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
ஏற்கனவே டில்லி அரசின் மதுபான கொள்கை விவகாரத்தில், ஊழல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், அமலாக்க துறையினரும், சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரணை நடத்தி, கைது நடவடிக்கைகளை முன்னர் மேற்கொண்டனர்.
அந்த அமைப்பினரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சி.ஏ.ஜி.,யின் அறிக்கை அமைந்துள்ளதால், அந்த விசாரணை அமைப்புகளும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ., அரசும், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், வரும் நாட்களில் ஆம் ஆத்மி தலைவர்கள், நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்க நேரிடும்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, 2021 - 22ல் உருவாக்கிய கொள்கையானது, மதுபான வர்த்தகத்தை எளிமையாக்கும். அதில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும்; சில தரப்பினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கும்; டில்லி அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித்தரும் என்றெல்லாம் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சி.ஏ.ஜி., அறிக்கை, அந்த கொள்கையில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துஉள்ளதை பார்க்கும் போது, உண்மையிலேயே முந்தைய அரசின் கொள்கை சரியானது தானா என்ற கேள்வியும், சந்தேகமும் உருவாகிறது. இந்த மதுபான கொள்கை மோசடி புகாரும், அரவிந்த் கெஜ்ரிவால் தான் வசித்த அரசு வீட்டை பல கோடி ரூபாய் செலவழித்து புதுப்பித்ததும், 'பரிசுத்தமான, மக்களுக்கு இடையூறுகள் இல்லாத அரசு நிர்வாகத்தை தருவோம்' என்ற, ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளன.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் வாயிலாக, பெரிய அளவில் டில்லி மக்களின் செல்வாக்கை பெற்று வளர்ந்து, ஆட்சியையும் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, தற்போதைய சி.ஏ.ஜி.,யின் அறிக்கையால் ஆட்டம் கண்டுள்ளது என்பதே நிதர்சனம்.
பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, சட்டசபை தேர்தலில், கணிசமான ஓட்டு சதவீதத்தை பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி, தற்போதைய அறிக்கையால், பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் இழக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெற, பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதிலும் மாற்றமில்லை.