ரஷ்யாவில் நடிகர் விஜய்: தேர்தலை புறக்கணிக்க முடிவா?
ரஷ்யாவில் நடிகர் விஜய்: தேர்தலை புறக்கணிக்க முடிவா?
ADDED : ஏப் 15, 2024 01:01 AM

சென்னை: படப்பிடிப்புக்கு ரஷ்யா சென்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை, நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் துவங்கினார். கட்சிக்கு 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்யப்பட்டு, மொபைல் போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழப்பம்
மூன்று நாட்களில், 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்ததாக தெரிவித்த கட்சி தலைமை, அதன்பிறகு நடந்த விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு. அதற்கு முன் இரண்டு படங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 19ம் தேதி, தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.
ஆனால், படப்பிடிப்புக்காக விஜய், ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நாட்களை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அதன்படி, 27ம் தேதி விஜய் சென்னை திரும்ப உள்ளதாக பட தயாரிப்பு வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அதனால், லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதற்கு, விஜய் சென்னைக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புக்கும் மாற்றாக கட்சி துவங்கியுள்ளதால், யாருக்கும் ஓட்டளிக்காமல் தேர்தலை புறக்கணிக்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், விஜய் கட்சியில் உறுப்பினராக இணைந்த நிர்வாகிகள், ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நிச்சயம் வருவார்
சர்க்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட விஜய் வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அவரது ஓட்டை, மற்றொருவர் போட்டுவிட்டு சென்றிருப்பார். தேர்தல் கமிஷனில் போராடி, நீதிமன்றம் வரை சென்று, தன் ஓட்டை விஜய் உறுதி செய்வார்.
அப்படி ஓட்டுரிமைக்கு போராடும் விஜய், ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல், ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில், அக்கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

