sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

திருத்தப்பட்ட அறிவிப்புகள்; தீர்க்கப்படாத சந்தேகங்கள்

/

திருத்தப்பட்ட அறிவிப்புகள்; தீர்க்கப்படாத சந்தேகங்கள்

திருத்தப்பட்ட அறிவிப்புகள்; தீர்க்கப்படாத சந்தேகங்கள்

திருத்தப்பட்ட அறிவிப்புகள்; தீர்க்கப்படாத சந்தேகங்கள்

6


ADDED : ஆக 09, 2024 01:09 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:09 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்ஜெட் அறிவிப்பின்போது நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான இண்டெக்சேஷன் பயன் முழுமையாக நீக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் இந்த வசதியை மீண்டும் வழங்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து இண்டெக்சேஷன் வசதியை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார். உண்மையில், என்ன திருத்தத்தை நிதியமைச்சர் கொண்டுவந்திருக்கிறார்? அதனால் யார் யாருக்கு என்னென்ன பயன்?

ஏன் எதிர்ப்பு?


பட்ஜெட் அறிவிப்புக்கு முன், வீடு, மனை, அல்லது இரண்டும், பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அத்தனை விதமான சொத்துகளின் மீதும் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு ஒரு முறை இருந்தது. ஒரு சொத்தை வாங்கிய காலத்தில் இருந்து அது விற்பனை செய்யப்படும் காலம் வரையில் உள்ள பணவீக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய சொத்தின் மதிப்பு, விற்பனை செய்யப் போகும் ஆண்டில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறது, அதில் பணவீக்கம் எவ்வளவு என்பதை மதிப்பிடவே இண்டெக்சேஷன் கணக்கீடு போடப்பட்டது.

விலை பணவீக்கம் மதிப்பீடு (காஸ்ட் இன்பிளேஷன் இண்டெக்ஸ்) ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, மதிப்பீடு செய்யப்பட்டு, விற்பனை விலைக்கும் இந்த இண்டெக்சேஷன் செய்யப்பட்டுள்ள மதிப்புக்கும் இடையிலான உண்மையான லாபத்துக்கு, 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டினால் போதும் என்று இருந்தது.

ஆனால் பட்ஜெட் அறிவிப்பின்போது, இந்த இண்டெக்சேஷன் வாய்ப்பு முழுமையாக நீக்கப்பட்டது. விற்பனை விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள தொகைக்கு 12.50 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அம்சம் தான் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இண்டெக்சேஷன் வாய்ப்பு நீக்கப்பட்டால், நடுத்தர மக்களும், மாதச் சம்பளக்காரர்களும் அதுநாள் வரை கஷ்டப்பட்டுச் சேமித்த சொத்துகளில் இருந்து துளி லாபம் கூட பார்க்க முடியாது என்ற நிலை உருவானதால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்புகள் எதிரொலித்தன.

வந்தது திருத்தம்


மாற்றுக் கருத்துக்களை மனதில் கொண்டு நிதி அமைச்சர் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதில், ரியல் எஸ்டேட் துறையில் இரண்டு வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதாவது 2024, ஜூலை 23க்கு முன்னர் வாங்கப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யப் போகும்போது, ஒன்று பழைய முறைப்படி இண்டெக்சேஷன் கணக்குப் போட்டு, மீதமுள்ள லாபத் தொகைக்கு மட்டும் 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தலாம்.

அல்லது இண்டக்சேஷன் வாய்ப்பை எடுத்துக்கொள்ளாமல், முழு லாபத்துக்கும் புதிய வரியான 12.50 சதவீதத்தில், நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டலாம்.

இரண்டு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதால், மக்கள், இதில் எது தங்களுக்கு லாபகரமாக இருக்கிறதோ, அந்த முறையில் நீண்டகால மூலதன ஆதாய வரியை செலுத்தும் வசதி ஏற்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் பொருந்தாது

ஆனால், இந்த வாய்ப்பு எல்லா சொத்துகளுக்கும் வழங்கப்படவில்லை. இது வீடு, மனை, அல்லது இரண்டுக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட சொத்துகளுக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு மீண்டும் தரப்பட்டுள்ளதாக திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஜூலை 23க்கு முன்னர் வாங்கப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யும்போது தான், இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த தேதிக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்யப் போகும்போது, விற் பனை விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையில் உள்ள மொத்த லாபத்துக்கும் 12.50 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.

இந்தத் திருத்தமானது, இந்தியாவில் உள்ள நபர்கள் மற்றும் ஹிந்துக் கூட்டுக் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். இது நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், லிமிடெட் லையபிலிட்டி நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் சொத்துகளுக்கு பொருந்தாது.

நஷ்டம் ஏற்பட்டால்?


வீட்டையோ, மனையையோ விற்பதில் லாபம் வந்தால், மேலே தெரிவித்த இரண்டு வாய்ப்புகளும் கிடைக்கும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் என்ன ஆகும்? பழைய முறைப்படி, அது நீண்டகால மூலதன நஷ்டம் என்று கணக்கிடப்படும். அந்த நஷ்டத்தை, மூலதன ஆதாயத்துக்கு இணையாக காண்பித்து, வரிச் சலுகை கோரலாம்.

நஷ்டம் அதிகமாக இருந்து, அதை ஒரே ஆண்டில் காண்பித்து சலுகை கோரமுடியவில்லை என்றால், இதற்கு முன், அந்த நஷ்டத்தை எட்டு ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொண்டே போகலாம். இப்போது அந்த வாய்ப்பு இல்லை.

நஷ்டத்தை ஆதாயத்துக்கு ஈடாக காட்ட முடியாது. சலுகையும் கோர முடியாது.

முழுமையான திருத்தம்


மொத்தத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது ஒரு பிரிவுக்கு மட்டுமேயானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அனைத்து வகை முதலீடுகளுக்கும் பொருந்தும் வகையில், சாமானியர்களுக்கும் ஏற்றவாறு திருத்தங்களை வெளியிட்டால் மட்டுமே, முழுமையான திருப்தி கிடைக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us