சும்மா கிடக்கும் அம்மா திருமண மண்டபங்கள்: ரூ.51 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் 'அம்போ'
சும்மா கிடக்கும் அம்மா திருமண மண்டபங்கள்: ரூ.51 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் 'அம்போ'
UPDATED : மார் 06, 2025 03:58 AM
ADDED : மார் 06, 2025 12:18 AM

சென்னை:சென்னை, மதுரையில், 51 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, 'அம்மா திருமண மண்டபங்கள்' மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை பெருநகரில் நான்கு இடங்கள், மதுரையில் ஒரு இடம் என 5 இடங்களில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை அண்ணா நகர், சென்னையில் ஆவடி பருத்திப்பட்டு, அயப்பாக்கம், கொரட்டூர், வேளச்சேரி ஆகிய இடங்களில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. 2018ல் அறிவிக்கப்பட்டு, 2020க்குள் அனைத்து மண்டபங்களும் கட்டி முடிக்கப்பட்டன.
இவற்றை தனியார் வாயிலாக நிர்வகிக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இந்த மண்டபங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.
சென்னையில் மண்டபங்கள் கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவும், 2020ல் நடந்தது. ஆனால், இதை நிர்வகிப்பதற்கான தனியாரை தேர்வு செய்வதில், வாரிய அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட, அம்மா திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு வராத நிலையில், சமூக விரோதிகள் அதில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார சாதனங்களை திருடி சென்று விட்டனர். அம்மா திருமண மண்டபங்கள் நிலைமை இப்படி தான் உள்ளன.
மதுரையில் அம்மா திருமண மண்டபம், 2021ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 2023 வரை யாரும் ஒப்பந்தம் எடுக்க வராததால், பூட்டியே கிடந்தது. 2023ல் இதை ஒப்பந்தம் எடுத்தவர், 'அஞ்சலி மஹால்' என, பெயரை மாற்றி விட்டார். வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமாக, திறப்பு விழா கல்வெட்டு மட்டுமே உள்ளது.
கடந்த ஆட்சி திட்டம் என்பதுடன், அதன் பெயரும், இன்றைய ஆட்சியாளர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டது. இதனால், மக்கள் நலனுக்காக, வீட்டுவசதி வாரியம் செய்த 51 கோடி ரூபாய் செலவு வீணாகியுள்ளது.
திருமண மண்டபமாக பயன்படுத்த முன்வராத நிலையில், வேறு பயன்பாட்டுக்காக இதை வாடகைக்கு கொடுப்பது குறித்தாவது, அதிகாரிகள் யோசிக்க வேண்டும்.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆட்சிக் காலத்தில் சரியான முறையில் திட்டமிடல் இன்றி, அவசர கோலத்தில் அம்மா திருமண மண்டபங்களை கட்டி விட்டனர். வாகனங்கள் நிறுத்துமிட வசதி இல்லை. குறிப்பாக, சென்னை வேளச்சேரி மண்டபத்தில் பொருட்கள் திருடு போன நிலையில், புதிய பொருட்கள் வாங்கி, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மண்டபம் அமைந்துள்ள தெரு மிக குறுகலாக இருப்பதால், போக்குவரத்து பிரச்னை ஏற்படும். இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பருத்திப்பட்டு, அயப்பாக்கம், கொரட்டூர் மண்டபங்களில் காணப்பட்ட குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு, புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இந்த மண்டபங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.