UPDATED : ஏப் 02, 2024 11:05 AM
ADDED : ஏப் 02, 2024 04:05 AM

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., கூட்டணி வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்ற வேண்டிய அ.ம.மு.க., நிர்வாகிகள் கட்சி தலைவர் போட்டியிடும் தேனி தொகுதியில் நல்ல பெயர் எடுக்க முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் தினகரனின், அ.ம.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க.,விற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் அ.ம.மு.க., தலைவர் தினகரன் போட்டியிடுகிறார்.
இதே போன்று லோக்சபா தொகுதியிலும், கூட்டணி அமைத்துள்ள வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வைக்க வேண்டும் என டிடிவி., தினகரகன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும், கூட்டணி அமைத்துள்ள வேட்பாளர்களுக்கு அ.ம.மு.க., நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பா.ம.க., சார்பில், முரளி சங்கர் போட்டியிடுகிறார்.
இவருக்கு பா.ஜ., நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். ஆனால், கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டிய அ.ம.மு.க., நிர்வாகிகள், சத்தமின்றி இருந்து வருகின்றனர்.
சில நிர்வாகிகள் தலைவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேனி தொகுதியில் முகாமிட்டு, அங்கு தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர், அ.ம.மு.க., நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
-நமது நிருபர்-

