தேர்தல் முடிவுக்கு பின் பா.ஜ.,வில் மாற்றம்: புதுப்பொலிவூட்ட அண்ணாமலை முடிவு
தேர்தல் முடிவுக்கு பின் பா.ஜ.,வில் மாற்றம்: புதுப்பொலிவூட்ட அண்ணாமலை முடிவு
ADDED : மே 16, 2024 02:16 AM

மதுரை: லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழக பா.ஜ.,வில் மாவட்ட நிர்வாகிகள் பலரையும் மாற்றி, கட்சிக்கு புதுப்பொலிவூட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முடிவெடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.,வை முழுதுமாக மாற்றி அமைக்கும் முடிவில் உள்ள அண்ணாமலை, முதலில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார். நிர்வாகிகளில், 75 சதவீதம் பேர் புதியவர்கள், 25 சதவீதம் பேர் சீனியர்களாக இருப்பர்.
இந்த, 75 சதவீதத்தில் பாதி பேர் இளைஞர்களாக இருப்பர். அனைவரும் அண்ணாமலைக்கு ஆதரவாக அல்லது அவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
தற்போது உள்ள மாவட்ட தலைவர்கள், சீனியர்களில் அனுபவமுள்ளவர்கள், முதிர்ச்சி பெற்றவர்களை மாநில நிர்வாகத்திற்கு அழைத்துக் கொள்வது.
அதேபோல மாநில நிர்வாகத்தில் உள்ள துடிப்பான இளைஞர்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவது என முடிவு செய்துள்ளார்.
சமீபத்திய தேர்தலில் பல மாவட்டங்களில் கட்சி பதவியில் உள்ளவர்கள் பதவியை வைத்து பணம் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டனர். எனவே ஜெயலலிதா பாணியில் நிர்வாகிகளை மாற்றி தன் பலத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.
வரும் ஜூன் முதல், மாவட்டம் முதல் தேசிய அளவிலான பதவிகளின் காலம் முடிவுக்கு வருகிறது. ஜூலை முதல் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். எனவே வரும் ஜூலையில் தமிழக அளவிலும், மாவட்டங்களிலும் புதிய ரத்தம் பாயும் இளம் நிர்வாகிகளை எதிர்பார்க்கலாம் என கட்சியினர் கூறுகின்றனர்.