ரூ.25 செலவில் தபால் ஓட்டு அனுப்புவதை தவிர்த்து பல ஆயிரம் கூடுதல் செலவு
ரூ.25 செலவில் தபால் ஓட்டு அனுப்புவதை தவிர்த்து பல ஆயிரம் கூடுதல் செலவு
ADDED : ஏப் 09, 2024 05:22 AM

தேனி : லோக்சபா தேர்தலில் தபால் ஓட்டுகளை மற்ற தொகுதிகளுக்கு நேரில் சென்று கொடுத்துவிட்டு, மீண்டும் அதனை நேரில் சென்று வாங்கி வருவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்க உள்ளது. இதற்காக அரசு அலுவலர்களிடம் தபால் ஓட்டுகள் பெறும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதுவரை நடந்த தேர்தல்களில் பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவுசெய்து தபால் துறை மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதனால் குறைந்த செலவில் தபால் ஓட்டுகள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை சென்றடையும்.
தற்போது புதிதாக தபால் ஓட்டுகளை மற்ற மாவட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து சென்று வழங்கப்படுகிறது.
உதாரணமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி செய்தார் என்றால் அவருக்கான தபால் ஒட்டு சீட்டை வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்று மாவட்ட தேர்தல் பிரிவில் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் பதிவு செய்த ஓட்டுகளை அங்கிருந்து வாகனம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது. தபால் ஓட்டு எடுத்து செல்லும் குழுவிற்கு மூன்று மாவட்டங்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையால் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் வீண் செலவு ஏற்படுகிறது. ஒரு தபால் ஓட்டினை ரூ.25 செலவில் அனுப்புவதை தவிர்த்து வாகனம், பாதுகாப்பு போன்றவற்றால் ரூ.25 ஆயிரம் வரை செலவிட நேரிடுகிறது என அலுவலர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஒரு தொகுதியில் 100 தபால் ஓட்டு உள்ளது என்றால் அதனை ஒரு குழு சென்று கொடுத்து விட்டு பின் வாங்கி வர வேண்டும். இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றனர்.

