'கேக்'குகளில் செயற்கை நிறம்: கர்நாடகாவில் வருகிறது தடை?
'கேக்'குகளில் செயற்கை நிறம்: கர்நாடகாவில் வருகிறது தடை?
UPDATED : ஆக 31, 2024 12:19 AM
ADDED : ஆக 30, 2024 11:06 PM

பெங்களூரு: கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறங்கள் சேர்க்க, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பேக்கரிகளில் விற்கப்படும், 'கேக்'குகளிலும், அபாயகரமான, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை நிறமிகள் மற்றும் ரசாயனங்கள் கலப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய வல்லுனர்கள் ஆய்வில் தெரிந்தது.
இது குறித்து, அவர்கள் அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கை:
பல பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளில் சிந்தடிக் நிறங்கள் பயன்படுத்துகின்றன. இவற்றில் அரசு நிர்ணயித்த நிறம் அல்லது பிளேவர்கள் தவிர, வேறு விதமான அடர்த்தியான நிறம், சுவையை கூட்ட வெவ்வேறு விதமான ரசாயனங்களை, அதிகமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இத்தகைய ரசாயனங்களை பயன்படுத்துவதால், கேக்குகள் தயாரித்து பல மணி நேரமானாலும், புத்தம் புதிதாக தெரிகின்றன.
மக்கள் அதிகமாக விரும்பும் பைனாப்பிள், ரெட் வெல்வெட், சாக்லேட் பிளேவர், பிளாக் பாரெஸ்ட் உட்பட பல வகை கேக்குகளில், செயற்கை நிறங்கள், டேஸ்டிங் பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை தடை செய்யும்படி, அரசுக்கு சிபாரிசு செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.