மம்தாவை பதவி விலக சொல்லுங்கள் ஸ்டாலினுக்கு குஷ்பு நெருக்கடி
மம்தாவை பதவி விலக சொல்லுங்கள் ஸ்டாலினுக்கு குஷ்பு நெருக்கடி
ADDED : ஆக 17, 2024 02:20 AM

சென்னை: கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் மவுனம் சாதிப்பதாக, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த பேட்டி:
சில மாதங்களுக்கு முன், மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கின.
கடந்த 9ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
ஆனால், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பயிற்சி டாக்டரின் பெற்றோருக்கு போன் செய்து, மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளது.
கோல்கட்டா உயர் நீதிமன்றம் தலையிட்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றிய பின், பாலியல் வன்கொடுமைகள் நடந்த மருத்துவக் கல்லுாரி கருத்தரங்கக் கூடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் காவல் துறை, சுகாதாரத் துறைக்கும் அமைச்சராக இருக்கிறார்.
எனவே, பெண் பயிற்சி டாக்டருக்கு நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்று, மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்; இனியும் முதல்வராக தொடர, அவருக்கு உரிமையில்லை.
பெண் டாக்டருக்கு நடந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சிறு சம்பவங்கள் நடந்தாலும் கொந்தளிக்கும் ராகுல், பிரியங்கா, கனிமொழி, சுப்ரியா சுலே போன்றவர்கள், இப்போது என்ன செய்கின்றனர்?
கோல்கட்டா கொடூரத்திற்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

